Nagaratharonline.com
 
செட்டிநாடு செம்மண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுப்பணி துவக்கம்  Nov 22, 09
 
சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு செம்மண் மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தில் முதல் கட்ட ஆய்வு பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் 52 சதவீத நிலப்பரப்பில் மானாவாரி விவசாயம் நடக்கிறது. 40 சதவீத உணவு உற்பத்தி இதன் மூலமே கிடைக்கிறது. மானாவாரி விவசாயத்தில் செம்மண், வண்டல் மண் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன.செம்மண் நிலத்தில் அதிக சாகுபடி இருந்தபோதும், இதை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.




இதை கருத்தில் கொண்டு செட்டிநாட்டில் 317 ஏக்கரில் ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.ஆய்வு துவக்கம்: இங்கு நடப்பு ஆண்டுக்கான களப்பணி ஆய்வு துவங்கியுள்ளது. முதற்கட்டமாக பயறு உற்பத்தியை அதிகரிக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பாசிப்பயறு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை, கால்நடை தீவனத்திற்கான மக்காச் சோளம் போன்றவற்றின் வீரிய ஒட்டு ரகங்கள் இயற்கை விவசாயத்தின்படி ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.




கோ- 28 ரக சோளம், தர்மபுரியில் விளையும் பையூர்-2 ரக கேழ்வரகு,கால்நடை தீவன பயிரின் அவசியம் கருதி மக்காச்சோளம், கம்பு, வேலி மசால் இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மழை காலத்தில் பயறு வகை பயிர்களின் வேர் அழுகல் நோய் ஏற்பட்டால், பூச்சி கொல்லி பயன்படுத்தாமல் கட்டுப்படுத்தும் முறை குறித்தும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இந்திய விவசாய ஆராய்ச்சி கழக நிதி உதவியுடன் திருப்புவனம், சாக்கோட்டை, புதுக்கோட்டை திருமயம் பகுதிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது.




ஆராய்ச்சி நிலைய தலைவர் பாலசுப்பிரமணின் கூறுகையில், வறட்சியிலும் நல்ல விளைச்சல் தரக்கூடிய உயர்ரக பயறு, தானியம், தீவன பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில் வம்பன்- 5 ரக உளுந்து விதை உற்பத்தி, வம்பன்-2 ரக பாசி பயறு, தீவன மக்காச்சோளம், பையூர்-2 ரக கேழ்வரகு, நிலக்கடலை உட்பட 10 பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு ஆய்வுப்பணி துவங்கியுள்ளது,'' என்றார்.

source : Dinamalar 23/11/09