Nagaratharonline.com
 
நற்சாந்துப்பட்டியில் நாக பஞ்சமி விழா  Sep 5, 11
 
நற்சாந்துப்பட்டி நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாக பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் குறிப்பிடத்தக்கதாக விளங்கும் இந்தக் கோயிலில், கோட்டை பெரியகருப்பர், சின்னக்கருப்பர், பொற்பனை மகா முனிஸ்வரர், அடைக்கலங்காத்தார், முப்புலி அய்யனார், சந்நியாசியார், சாவக்காரர், பட்டாணியார், அண்ணன்மார் எழுவர், பிச்சி அம்மன், பெரிய அடைக்கனார், சின்ன அடைக்கனார் ஆகிய பரிவார தெய்வங்களுடன் நாகதேவி நல்லதங்காள் அம்மன் குடிகொண்டிருப்பது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் நாக பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல, நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, உலக நன்மைக்காக அதிகாலை 5 மணிக்கு நாக பஞ்சமி வேள்வியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 7 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேதமந்திரம் மற்றும் திருமுறை பாடப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பகல் 1 மணிக்கு நாகதேவி சிறப்பு அலங்காரத்துடன் அம்மனின் ஊஞ்சல் உற்சவமும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நற்சாந்துப்பட்டி நகரத்தார், கீழத்தெரு, மேலத்தெரு பங்காளிகள், பொதுமக்கள் மற்றும் திருவருள் நல்லி தெய்வீகப் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

source ; Dinamani