Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் "மெகா சைஸ்' கொழுக்கட்டை படையல்.  Sep 2, 11
 
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம், "மெகா சைஸ்' கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடந்தது. இங்கு, ஆக.,23 ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் புறப்பாடு நடந்தது. தீர்த்தவாரி: பத்தாம் நாள் விழாவான நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விநாயகர் தங்க கவசத்தில் காட்சி அளித்தார். உற்சவர் தங்கமூஷிக வாகனம், பல்லக்கில் சண்டிகேஸ்வரர் கோயிலை வலம் வந்து, ஊரணியில் எழுந்தருளினர். குளத்தில், கூர்ஜம், அங்குச தேவருக்கு, சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் அபிஷேகம் செய்தார். பகல் 12.30 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.18 படி அரிசியால் தயாரிக்கப்பட்ட முக்குறுணி மோதகம் எனப்படும்"மெகா சைஸ்' கொழுக்கட்டை படையல் நடந்தது.இரவு, வெள்ளி ரிஷப, தங்க மூஷிக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.

பாதுகாப்பு: பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. பன்னீர்செல்வம் எஸ்.பி., தலைமையில், கூடுதல் எஸ்.பி., கண்ணன் உட்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் அறங்காவலர்கள் தேவகோட்டை ராமநாதன் செட்டியார், அமராவதிபுதூர் சிதம்பரம் செட்டியார் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

source : Dinamalar