Nagaratharonline.com
 
கண்டனூரில் ப. சிதம்பரம் வீட்டில் திருட்டு  Aug 15, 11
 
 
கண்டனூரில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டின் எதிரே உள்ள அவரது பங்கு வீட்டினுள் மர்மநபர்கள் புகுந்து, 5 அறைகளை உடைத்துத் திருடியுள்ளதாகத் தெரியவருகிறது. இதுகுறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கண்டனூர் மோதிலால் தெருவில் ப. சிதம்பரத்தின் வீடு உள்ளது. அதன் எதிரில் 1908-ல் கட்டப்பட்ட, அவரது தந்தை வழி உறவினர்கள் (பங்காளிகள்) அனைவருக்கும் சொந்தமான வீடு உள்ளது. இதில் யாரும் வசிக்கவில்லை. கண்டனூரில் அதே பகுதியில் வசிக்கும் உறவினர்கள் அவ்வப்போது வீட்டைத் திறந்து பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை பகல் வேளையில், அமைச்சரின் உறவினர்கள், பணியாளர் ஒருவரிடம், அந்தப் பங்கு வீட்டைத் திறந்து பார்த்துவரச் சொன்னார்களாம். அப்போது முகப்புக் கதவைத் திறந்து உள்ளே சென்ற அந்தப் பணியாளர், அறைகளின் ஜன்னல் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனே, காரைக்குடி டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் மற்றும் சாக்கோட்டை காவல் நிலையப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தைப் போலீஸார் பார்வையிட்டனர். இந்த வீட்டில், கீழ் தளம், மேல் தளம் என இரு தளங்களில் 22 அறைகள் உள்ளனவாம். மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து, கீழ் தளத்தில் 5 அறைகளின் ஜன்னல்களின் ஒரு பகுதியில் உள்ள கம்பிகளை அகற்றியும், 1 அறையின் கதவைத் திறந்தும் உள்ளே புகுந்துள்ளனர். மேல் தளத்தில் 3 அறைகளின் கதவுகளைத் திறந்து உள்ளே புகுந்துள்ளனர். இந்த அறைகளில் பொருள்கள் சிதறிக் கிடந்துள்ளன. கீழ் தளத்தின் இடதுபுற அறையில் வெண் பித்தளை குத்துவிளக்கின் ஒரு பகுதியும், பழைய பொருள்களும் சிதறிக் கிடந்தனவாம். தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.