Nagaratharonline.com
 
"தங்கத்தை' அடுத்து... "சிடிசினிமா'மதுரையில் இடிக்கப்படும் இன்னொரு தியேட்டர்  Aug 4, 11
 
மதுரையில் பழமை வாய்ந்த முதல் சினிமா தியேட்டர் "சிடிசினிமா' விரைவில் இடிக்கப்படவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர் தங்கம் இடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தியேட்டரும் தான் இருந்த இடம் தெரியாமல் இடிபட போகிறது
.மதுரை தெற்குமாசி வீதியில் 1930ல் ஜெகநாதய்யர், நன்னய்யரால் "சிடி சினிமா' தியேட்டர் துவங்கப்பட்டது. "சிட்டி சினிமா' என்ற பெயர் பேச்சு வழக்கில் "சிடி சினிமா' என மாறியது. அமெரிக்காவில் தயாரான ஆர்.சி., புரஜக்டர் மூலம், முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் பேசும் படம் இங்கு தான் ரிலீஸ் ஆனது. "தேவதாஸ்' திரைப்படம் நூறு நாட்களுக்கு அதிகமாக திரையிடப்பட்டு, வசூலில் சாதனை படைத்தது. 1957ல் ஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட "பவர் புரஜெக்டர்' அறிமுகப்படுத்தப்பட்டது.எம்.ஜி.ஆரின் பெரும்பாலான திரைபடங்கள், இங்கு தான் "ரிலீஸ்' ஆகும். ஒருகாலத்தில் ரசிகர்களின் விசில் சத்தத்தில், அரங்கம் நிறைந்த காட்சிகளாக நிரம்பி வழிந்த "சிடி சினிமா', இன்று தனிமையில் இறுதிகாலத்தை கடத்தி வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் மூடுவிழா கண்ட இத்தியேட்டர், "கார் பார்க்கிங்' ஆக செயல்படுகிறது. விரைவில் "ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' கட்ட, தியேட்டரை இடிக்க உள்ளனர். "டிவிடி' வந்தவுடன் "சிடி'யை மறந்தவர்கள், "சினிமால்'கள் வந்த பின் "சிடி சினிமா'வை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை.

ரசணையை சுமந்து வந்த ரசிகர்களை சுமந்த பர்னிச்சர்களும் விற்கப்பட்டு விட்டன. கனவு நாயகன்களை உருவம் காட்டிய "பவர் புரஜெக்டர்', வாங்க ஆளில்லாமல் தூசி படிந்துள்ளது. மதுரை தியேட்டர்களில் முதல்வனாய் இருந்த "சிடி சினிமா' விரைவில் இடிக்கப்படவுள்ளது.

source ; Dinamalar