Nagaratharonline.com
 
எளிய முறையில் பட்டா பெற புதிய திட்டம் அமல்  Jul 25, 11
 
சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் வாங்கும் நிலங்களுக்கு எளிய முறையில் பட்டா வழங்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.
கிராம பொதுமக்கள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் கிராம நிர்வாக அலுவலரிடம் பட்டா மாறுதல் விண்ணப்பத்தை நேரிடையாக கொடுத்து ஒப்புகைச் சீட்டு பெறலாம். கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டா மாறுதல் விண்ணப்பத்தை செவ்வாய்க்கிழமைகளில் அளிக்க வேண்டும்.
பட்டா மாறுதல் கோரும் மனுவுடன் மூலப் பத்திரத்தின் நகல், இணைப்பு பத்திரங்களின் நகல்கள், கிரயம் பெற்ற பத்திரத்தின் நகல் (பதிவு பெற்றது), இணைப்புப் பத்திரங்கள் இல்லையெனில், வில்லங்கச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பட்டா மாறுதல் சான்றிதழை, மனுதாரர் கிரயம் பெற்ற நிலம் முழு புலமாக இருந்தால் விண்ணப்பித்த தேதியிலிருந்து 2-வது வெள்ளிக்கிழமையும், உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களுக்கு மனு அளித்த தேதியிலிருந்து 4-வது வெள்ளிக்கிழமையும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஒப்புகைச் சீட்டு மற்றும் அசல் ஆவணங்களைக் காட்டி பட்டா மாறுதல் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

உட்பிரிவுக்கான கட்டணங்களை வட்டாட்சியரிடமிருந்து பட்டா பெறும்போது மனுதாரர்கள் செலுத்தினால் போதுமானது. இதன்மூலம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் அலைவது தடுக்கப்படும். இத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

source ; Dinamalar