Nagaratharonline.com
 
ஐ.ஓ.பி., வங்கிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம்  Jun 22, 11
 
மதுரையில் ஐ.ஓ.பி., வங்கிக்கு, 28 ஆயிரத்து 20 ரூபாய் அபராதம் விதித்து, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. மதுரை மாவட்ட கோர்ட் வளாகத்தில் ஐ.ஓ.பி., வங்கி கிளை உள்ளது. இங்கு வக்கீல் ஒருவர், சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். இக்கணக்கில் இருந்து எல்.ஐ.சி., வீட்டு வசதி நிறுவனத்திற்கு, இ.சி.எஸ்., முறையில், ஆறாயிரத்து 510 ரூபாய் மாதம் தோறும் செலுத்தப்பட்டு வந்தது. வட்டி தொடர்பாக வக்கீலுக்கும், எல்.ஐ.சி., நிறுவனத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், தனது சேமிப்பு கணக்கில் இருந்து, எல்.ஐ.சி.,க்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என, வங்கிக்கு 2006 ஏப்.,16ல் வக்கீல் கடிதம் அனுப்பினார். இத்தகவலை எல்.ஐ.சி.,க்கும் தெரிவித்தார். எனினும், சேமிப்பு கணக்கில் இருந்து ஏப்., மற்றும் ஜூன் மாதத்திற்கான இரண்டு தவணையாக 13 ஆயிரத்து 20 ரூபாய், எல்.ஐ.சி.,க்கு தரப்பட்டது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றாத, ஐ.ஓ.பி., வங்கி கிளை மீது நடவடிக்கை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் வழக்கு தொடர்ந்தார். எல்.ஐ.சி.,க்கு செலுத்தப்பட்ட இரண்டு மாத தவணை தொகை 13 ஆயிரத்து 20 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு, வழக்கு செலவாக 5,000 ரூபாய் வக்கீலுக்கு வழங்க, ஐ.ஓ.பி., கிளைக்கு, நீதிபதி ஜி.தர்மராஜ் உத்தரவிட்டார்.

source ; Dinamalar