Nagaratharonline.com
 
சிங்கம்புணரி: பாலாற்றில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி  Nov 11, 09
 
பாலாற்றில் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி


சிங்கம்புணரி: சிங்கம்புணரி பாலாற் றில் தண்ணீர் வரத்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இப்பகுதியில் கண்மாய் பாசன விவசாயிகள் பாலாற்று நீரை நம்பியுள்ளனர். பருவ மழை உரிய நேரத்தில் துவங்காததால் பாலாற்றில் நீர் வரத்து இல்லை.

இதனால் இங்கு ஆடிப்பட்டத்தில் விவசாயம் துவங்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் 18 செ.மீ., மழை பெய்துள்ளதால், சிறிய கண்மாய், குளங்களில் நீர் தேங்கியுள்ளது. அம்மி, வாடித்தி, விநாயகா, ஐநூற்றி, புதுக்கண்மாய்களில் கால் பகுதி தண்ணீர் உள்ளது.திண்டுக்கல் கரந்த மலைப்பகுதியில் அதிக மழை பெய்து, பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேலப்பட்டி, கிருங்காக் கோட்டை, ராஜகால் அணை பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வந்துள்ளது. கீழ் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இம்மழையால் புழுதி விதைப்பு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிய கண்மாய் பாசனங்களில் நடவு பணிகள் துவங்கியுள்ளன. காலம் தவறி மழை பெய்தாலும், பாலாற்றில் தண்ணீர் வரத்து இருப்பதால் விவசாயிகள், ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளனர்.

Source:Dinamalar 11/11/09