Nagaratharonline.com
 
பஸ் டிக்கெட் வாங்கியும் அபராதம் : பயணிக்கு நஷ்ட ஈடு தர உத்தரவு  May 25, 11
 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, "டவுன்ஷிப்' காலனியை சேர்ந்த தேவராஜன் என்பவர், சென்னை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு (இயக்கம்) எதிராக, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2009, செப்டம்பர் 25ம் தேதி, மாநகர பஸ்சில் (தடம் எண்: 19ஏ), காரப்பாக்கத்திலிருந்து தி.நகருக்கு பயணித்துக் கொண்டிருந்தேன். பஸ், எஸ்.ஆர்.பி., "டூல்ஸ்' நிறுத்தம் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் பஸ்சில் ஏறினார். என்னிடம், அந்த பயணத்திற்கான ஆறு ரூபாய் டிக்கெட்டுடன், ஏற்கனவே எடுக்கப்பட்ட நான்கு ரூபாய் டிக்கெட்டும் இருந்தது. அந்த டிக்கெட்டை மட்டும் கருத்தில்கொண்டு, டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறி, பஸ்சிலிருந்து இறக்கிவிடப்பட்டேன். 500 ரூபாய் அபராதமும் விதித்தனர். டிக்கெட் வாங்கியும், டிக்கெட் வாங்காமல் பயணித்தாக கருதி,சேவை குறைபாடு செய்துள்ளனர். இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த சென்னை (தெற்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி கோபால், உறுப்பினர்கள் மல்லிகா, தீனதயாளன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "குறிப்பிட்ட பயணத்தின்போது தான் வாங்கிய டிக்கெட்டின் நகல் மனுதாரிடம் உள்ளது. மேலும், அவரது புகாரை மறுப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எதிர்மனுதாரர்களிடம் இல்லை. எனவே, அபராத தொகை 500 ரூபாயை திரும்ப தர வேண்டும். சேவை குறைவாக செயல்பட்டதற்காக மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும், எதிர்மனுதாரர்கள் தர வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

source : Dinamalar