Nagaratharonline.com
 
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்  May 18, 11
 
கல்லூரி ஆசிரியருக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு (எஸ்.இ.டி. -செட்) விண்ணப்பங்கள் மே 14 முதல் வழங்கப்பட உள்ளதாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பங்கள், மே 14-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம் (www.b-u.ac.in), பல்கலைக்கழக மானியக் குழு (www.ugc.ac.in) ஆகியவற்றின் இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000-ம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ. 750-ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 250-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூன் 14-க்குள் அனுப்ப வேண்டும்.

ஆகஸ்ட் 14-ல் தேர்வு: ஆகஸ்ட் 14-ல் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, சிதம்பரம், காரைக்குடி, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் சுமார் 50 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை பாடத்தில் தொடர்புள்ள பாடங்களில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம்.




source : Dinamani