Nagaratharonline.com
 
திருப்பத்தூர்: 1587 வாக்குகள் வித்தியாசத்தில் கேஆர். பெரியகருப்பன் வெற்றி  May 15, 11
 
காரைக்குடி, மே 14: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கேஆர். பெரியகருப்பன் வெற்றி பெற்றதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கேஆர். பெரியகருப்பனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர். ஐ.ஜே.கே, பா.ஜ.க, பி.எஸ்.பி, சுயேச்சைகள் என மொத்தம் 12 பேர்

போட்டியிட்டனர். இதில் திமுகவுக்கும், அதிமுகவுக்குமே நேரடிப் போட்டி இருந்தது.

காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் இந்தத் தொகுதியின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் இருந்தார். வாக்கு வித்தியாசம் 1500-லிருந்து 2000-த்துக்குள்ளேயே இருந்துவந்தது.

இதனிடையே தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பெரியகருப்பனுக்கு 350 வாக்குகளும், ராஜகண்ணப்பனுக்கு 74 வாக்குகளும் கிடைத்தன.

இந்த நிலையில் 18-வது சுற்றில் ராஜகண்ணப்பனின் வாக்கு வித்தியாசம் வெறும் 46 ஆக சரிந்தது. வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் முன்னிலை பெறத் தொடங்கினார்.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்ணில் குளறுபடி இருப்பதாகவும், மேலும் வெளியாள் வந்ததாகவும் கூறி அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நாற்காலி வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததால் இரவு 9 மணியளவில் வாக்கு எண்ணும் பணியும் நிறுத்தப்பட்டது. பிரச்னை நடைபெற்ற இடத்துக்கு போலீஸôர் சென்று ரகளையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

அதிமுக வேட்பாளரின் புகார் மற்றும் ரகளை குறித்து உடனடியாக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் வாக்கு எண்ணும் பணி இரவு 11 மணிக்குத் தொடங்கியது. 19-வது சுற்றின் முடிவில் பெரியகருப்பன் 551 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

மீண்டும் அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரும் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. வாக்கும் எண்ணும் அறை முன்பாக அதிரடிப்படை போலீஸôர் நிறுத்தப்பட்டனர். பிரச்னையில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதன் பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து வாக்கு எண்ணும் பணியை மீண்டும் தொடங்கினர். வாக்கு எண்ணும் பணியை நிறுத்தி, நிறுத்தி தொடங்கியதால் சனிக்கிழமை அதிகாலை 3 மணியைத் தாண்டியது.

அமைச்சர் பெரியகருப்பனே சொற்ப எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்ததால் அதிமுகவினர் சந்தேகப்படுவதாகக் கூறி, வாக்கு எண்ணிக்கை முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறி, அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் கட்சியினருடன் மையத்தைவிட்டு வெளியேறினார். அப்போது அவர் கூறியது:

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தரப்படும் எண்ணும்,

படிவம் 17-ல் தரப்படும் எண்ணும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். ஆனால் இதில் வித்தியாசம் வந்தது. 6 பெட்டி இருக்கும்போது இதனைக் கண்டறிந்து கேட்ட போது அதிகாரிகள் உரிய விளக்கம் தராமல் மேலிடத்தின் (தில்லி) அழுத்தத்தால் வாக்குகள் எண்ணி முடிக்கும் செயலைத் தொடருகின்றனர். எனவே இந்தத் தேர்தல் முடிவு சரியானதல்ல என்றார்.

இதனிடையே வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. வாக்கு எண்ணிக்கை மொத்தம் 21 சுற்றுகள். இதில் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் 83,488 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் 81,901 வாக்குகளும்

பெற்றனர்.

காலை 4 மணிக்கு திமுக வேட்பாளர் கேஆர். பெரியகருப்பன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளரைவிட 1584 வாக்குகள் கூடுதலாக அவர் பெற்றிருந்தார். அவருக்குத் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அழகுமீனாள் சான்றிதழை வழங்கினார்.

திருப்பத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தடைப்பட்டு நடந்ததால் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான வா.சம்பத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். ராஜசேகரன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்திலேயே முகாமிட்டிருந்தனர்.

இதர வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்: எம். சாத்தையா (பிஎஸ்பி)-799, எம். ஷேக் தாவூது (பாஜக)-1154, எம். சிங்காரவேலு (ஐ.ஜே.கே)-1270, சுயேச்சைகள் பி. குணசேகரன்-281, எஸ். சக்திவேலு-346, எஸ். சந்தானகிருஷ்ணன்-345,

ஆர்.சாத்தப்பன்-593, யு.தியாகராஜன்-715.


Source:Dinamani