Nagaratharonline.com
 
சிகிச்சைக்கு இந்தியா செல்லாதீர்கள் ; ஒபாமா வேண்டுகோள்  Apr 20, 11
 
குறைந்த செலவிலான மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களை அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர், அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை தனது குடிமக்களுக்குக் கிடைக்க வழி ஏற்படுத்தித் தரப் போவதாகக் கூறினார்.

வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் அவர் இவ்விதம் கூறியவுடன் அதை பலத்த கரகோஷத்துடன் மக்கள் வரவேற்றனர்.

அமெரிக்காவில் மருத்துவ கட்டணங்கள் உயர்ந்து வருவது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்டதற்கு, ஒபாமா இவ்விதம் பதில் அளித்தார். குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும்போது, மக்கள் வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

source : Dinamani