Nagaratharonline.com
 
மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி  Apr 14, 11
 
மதுரை சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.இதை முன்னிட்டு இன்று காலை அம்மனும்,
சுவாமியும் மேலமாசிவீதி கட்டுச்செட்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அபிஷேகத்திற்கு பின், அம்மனுக்கு பரிவட்டம் மட்டும் சாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு கோயிலுக்கு புறப்பாடு நடக்கிறது. மாலை 5 மணி முதல் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில், திருமலை நாயக்கர் வழங்கிய ரத்தன கிரீடத்திற்கு அபிஷேகமும், மாலை 6.05 மணி முதல் 6.29 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது.

பின் அம்மனுக்கு பரிவட்டமும், வெற்றிக்கு அறிகுறியாக வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்படும். இதைதொடர்ந்து, அம்மனின் அரச பிரதிநிதியாக கருதப்படும், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன், அம்மனிடமிருந்து செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் வழங்குவார். இரவு 8 மணிக்கு மேல் அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வருகிறார். இன்று மாலையில் துவங்கும் அம்மனின் அரசாட்சி ஆவணி மாதம் வரை நடக்கும்.


source : Dinamalar