Nagaratharonline.com
 
பயிற்றுவித்த கல்வி நிலையங்களை மறக்கக் கூடாது' : தமிழண்ணல்.  Apr 6, 11
 
பயிற்றுவித்த கல்வி நிலையங்களை மறந்துவிடக் கூடாது என்றார் முனைவர் தமிழண்ணல்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை, அறிவியல் கல்லூரியில், அண்மையில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா, கல்லூரி நிறுவனர் நாள் விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

பயிற்றுவித்த கல்வி நிலையங்களை மாணவர்கள் மறக்கக் கூடாது. என்றும் நினைவில் கொள்ள வேண்டும். கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.

இந்தக் கல்லூரியில் பயின்றவர்கள் சமுதாயத்தில் பல உயர்ந்த நிலைகளில் உள்ளனர்.

100 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதியே இல்லாத நிலையில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படாத நிலையில், கல்லூரி நிறுவனர்கள் மாணவர்களுக்குத் தங்க இடமும், உண்ண உணவும், உதவித் தொகையும் வழங்கினர்.

இந்தக் கல்லூரிக்குப் பிறகே அண்ணாமலைப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

அதுவரையிலும் நகரத்தார்கள் கோயில் திருப்பணிகளிலும், சைவ சமயத் தொண்டிலும் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். நகரத்தார்கள் கல்விப் பணி செய்ய முன்னோடியாகத் திகழ்ந்தது இந்தக் கல்லூரி.

இந்தக் கல்லூரியில் சொற்பொழிவாற்றாத தமிழறிஞர்களே இல்லை எனக் கூறலாம்.

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் 3 முறை இந்தக் கல்லூரியில் பேசியுள்ளார்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க., ரா.பி. சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார், விபுலானந்தர் போன்ற பெருந்தமிழறிஞர்களைக் கொண்டு ஆண்டுதோறும் தமிழ் மாநாடுகளை இந்தக் கல்லூரி நடத்தியது.

தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதல் முறையாக தீர்மானம் இயற்றியது இங்குதான்.

1918-ல் மதுரை வழக்குரைஞர் ஜெ.எம். சோமசுந்தரத்தால் இந்தத் தீர்மானம் முன் மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் அன்றைய ஆங்கிலேய அரசுக்கும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்கும் அனுப்பப்பட்டது. அந்தளவுக்கு உயர் கல்வியிலும் தமிழின் உயர்விலும் இந்தக் கல்லூரி முன்மாதிரியாக தொண்டாற்றியுள்ளது என்றார் தமிழண்ணல்.


source : Dinamani

.