Nagaratharonline.com
 
வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள்  Mar 10, 11
 
வடபழனி முருகன் கோவில் கொடி மரத்தில், மயில் வடிவத்தில் வந்து அமர்ந்த தேனீக்களை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.வடபழனி கோவிலில் நேற்று மதியம் உச்சி காலம் முடிந்து, கதவுகள் மூடப்பட்டன. அப்போது, கோவிலில் மூலவருக்கு எதிரே அமைந்துள்ள கொடி மரத்தை தேனீக்கள் பல சுற்றி வலம் வந்தன.

மாலை 3 மணியளவில் கோவிலுக்குள் சென்ற ஊழியர்கள், கொடி மரத்தில் மயில் போன்ற வடிவத்தில் தேனீக்கள் அமர்ந்து இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்.குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம் மயில் தோற்றம் அமைந்திருந்தது. மயில் தோற்றத்தில் தேனீக்கள் கூடு கட்டத் தயாரான தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்குள் சென்று மயில் வடிவத்தில் உள்ள தேனீக்களை கண்டு ரசித்தனர்.

அப்போது பரவசமடைந்த பக்தர்கள் சிலர், "அரோகரா' கோஷமிட்டு முருகனையும், தேனீக்களையும் வணங்கிச் சென்றனர். வடபழனி முருகன் கோவிலுக்குள் தேன்கூடு எங்கும் இல்லாத நிலையில், நேற்று திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள், மயில் தோற்றத்தில் வந்து அமர்ந்ததை கண்டு கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் இன்னும் ஆச்சரியத்தில் இருந்து விலகாமல்
உள்ளனர்.

source : Dinamalar