Nagaratharonline.com
 
கூடுதலாக இரண்டு 108 அரசு ஆம்புலன்ஸ் வாகனங்கள்: ப.சிதம்பரம் துவக்கி வைத்தார்  Mar 1, 11
 
காரைக்குடி, பிப். 27: காரைக்குடியில் கூடுதலாக தமிழ்நாடு அரசு 108 இரண்டு அவசரகால ஊர்திகளை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

காரைக்குடி புதிய பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், 108 என்ற மூன்று எண்களில் அழைத்த 20 நிமிடங்களில் வந்து விபத்தில் உள்ளவரையோ, குழந்தைப்பேறுக்காக உள்ளவர்களையோ பத்திரமாக அழைத்துச்சென்று அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்தது சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்.

இது மத்திய அரசுத் திட்டம். அந்தந்த மாநில அரசுகள் இதனை செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசு இந்தத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 9 வண்டிகள் இயங்கி வருகின்றன.

இதன் இயக்குநரிடம் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் 2 வண்டிகள் வந்திருக்கின்றன. இம்மாவட்டத்தில் 11 வண்டிகள் மூலம் அவசரகாலத்துக்கு மக்கள் பயன்பாட்டுக்காக சேவையாற்றும் என்றார் அமைச்சர் ப.சிதம்பரம்.

காரைக்குடி நகர்மன்றத்தலைவர் எஸ். முத்துத்துரை வரவேற்றார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கேஆர். ராமசாமி, சங்கராபுரம் ஊராட்சித்தலைவர் எஸ்.மாங்குடி, காரைக்குடி நகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Source:Dinamani