Nagaratharonline.com
 
பள்ளத்தூர் சிவன் கோவிலுக்கு ஸ்ரீகாசி சொர்ணலிங்கேஸ்வரர் வருகை  Feb 24, 11
 
காரைக்குடி, பிப்.23: காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் ஸ்ரீ தங்க விசாலாட்சி அருகே எழுந்து அருள் பாலிக்க பிரதிஷ்டை செய்யப்பட உள்ள தங்கத்தாலான

ஸ்ரீ காசி சொர்ணலிங்கேஸ்வரர் லிங்கம் பள்ளத்தூர் நகரச்சிவன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தது.

வெள்ளிக் கேடகத்தில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நிதியாகவும், தங்கமாகவும் அளித்த காணிக்கையைக்கொண்டு 3.5 கிலோ எடையில் தங்கத்தால் ஆன வைரம் பதித்த லிங்கமான ஸ்ரீ காசி சொர்ணலிங்கேஸ்வரர் 76 ஊர் நகரத்தார் கோவில்களில் லிங்கம் வழிபாடு நடத்த வலம் வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காரைக்குடி அருகே பள்ளத்தூர் நகரச் சிவன் கோவிலுக்கும் கொண்டுவரப்பட்டது. முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகரச் சிவன் கோவில்களில் தரிசனத்துக்கு வைக்கப்பட்ட ஸ்ரீ காசி சொர்ணலிங்கேஸ்வரர் மீண்டும் செவ்வாய்க்கிழமை இரவு சிவகங்கை மாவட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான் நகரச் சிவன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணிக்கு பள்ளத்தூர் நகரச் சிவன் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டது.

அங்கு வெள்ளிக் கேடகத்தில் லிங்கம் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

புதன்கிழமை கண்டனூர், புதுவயல், கோட்டையூர் மற்றும் காரைக்குடி செக்காலை நகரச் சிவன் கோவில்களிலும் லிங்கம் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது.

source : Dinamani