Nagaratharonline.com
 
வடிவுடையம்மன் கோவில், திருக்கல்யாண உற்சவம்  Feb 15, 11
 
திருவொற்றியூர் : வடிவுடையம்மன் கோவில், திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பதற்காக மண்ணடியிலிருந்து தண்டாயுதபாணி தங்கத்தேரில் ஊர்வலமாக திருவொற்றியூர் வந்தடைந்தார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமிகள், வடிவுடையம்மன் கோவில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும்.

இந்தாண்டு 11 நாள் பிரம்மோற்சவ விழா, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான திருக்கல்யாண உற்சவம் வரும் 17 ம்தேதி நடக்கிறது.
திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க மண்ணடி தண்டாயுதபாணி சுவாமி திருவொற்றியூர் வருவது வழக்கம். இதன்படி,நேற்று காலை மண்ணடி பவளக்காரன் தெரு நகரத்தார் மண்டபத்தில் உள்ள கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் புது தண்டாயுதபாணியும், வெள்ளித் தேரில் பழைய தண்டாயுதபாணியும் திருவொற்றியூர் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.


பவளக்காரன் தெருவில் இருந்து ராயபுரம் மேம்பாலம், வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோடு, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, டி.எச்.ரோடு வழியாக திருவொற்றியூர் நகரத்தார் மண்டபத்தை ஊர்வலம் சென்றடைந்தது.வழி நெடுகிலும் பக்தர்கள் தண்டாயுதபாணிக்கு அர்ச்சனைகள் செய்து தரிசனம் செய்தனர். தேரின் பின்னால் பக்தர்கள், முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
இதற்காக காலை முதல் மாலை வரை பக்தர்கள் நடைபயணமாக திருவொற்றியூருக்குச் சென்றனர். பக்தர்களுக்கு வழிநெடுக பொதுமக்கள் தண்ணீர் பாக்கெட்கள், குளிர்பானங்களை கொடுத்து வரவேற்பு அளித்தனர்.திருக்கல்யாண உற்சவமும் முடிந்து, மறுநாள் தண்டாயுதபாணி சுவாமிகள் மீண்டும் மண்ணடி பவளக்காரன் தெருவைச் சென்றடைவார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பிரமோற்சவ விழா வரும் 19ம் தேதி நிறைவடைகிறது.

source : Dinamalar