Nagaratharonline.com
 
3,000 பஸ்களில் 30 மட்டுமே சென்னையில் "நைட் சர்வீஸ்'  Feb 12, 11
 
இரவு 10 மணிக்கு பிறகு பஸ் சர்வீஸ்கள் அதிகளவில் இல்லாததால், சென்னை வரும் ரயில் மற்றும் பஸ் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேர பஸ் சர்வீஸ்களை அதிகரித்தால், மாநகர போக்குவரத்து கழகத்தை மீண்டும் லாபத்தில் இயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

3,000 பஸ்கள் இயக்குவதாக மார் தட்டும் மாநகர போக்குவரத்து கழகம், இரவு நேரத்தில் 30 பஸ்களுக்கும் குறைவாகவே இயக்குகிறது. இந்த இரவு பஸ்களும், திருவொற்றியூர் - திருவான்மியூர், எண்ணூர் - திருவான்மியூர், திரு.வி.க.,நகர் - சி.எம்.பி.டி., ஆவடி - தாம்பரம், திருவொற்றியூர் - பூந்தமல்லி, பாரிமுனை - ஆவடி, திருவொற்றியூர் - சி.எம்.பி.டி., எண்ணூர் - சி.எம்.பி.டி., பாரிமுனை - சி.எம்.பி.டி., திருவொற்றியூர் - தாம்பரம், திருவல்லிக்கேணி - சி.எம்.பி.டி., ஆகிய வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் ஒரு சர்வீஸ் மட்டும் என்பதால் 11 மணிக்குள் பஸ்கள் புறப்பட்டு சென்று விடுகின்றன. அதனால், 11.30 மணிக்கு பிறகு வரும் பயணிகள் அங்கிருந்து செல்ல முடியாமல் அதிகாலை 4.30 மணி வரைக்கும் காத்திருக்கவேண்டி இருக்கிறது. இதனால், வெளியூர்களில் இருந்து இரவு நேரங்களில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு புறநகர் அரசு மற்றும் ஆம்னி பஸ் நிலையங்கள் வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேஜிக் ஆட்டோக்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை நேரத்தில் 10 ரூபாய் கட்டணம் வசூலித்தால், இரவு நேரத்தில் 40 ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றனர்.குறிப்பிட்ட இடங்களுக்குமட்டுமே செல்வதால், அங்கிருந்து மற்றொரு ஆட்டோவில் ஏறி பயணிக்க வேண்டிய நிர்பந்தம் பயணிகளுக்கு ஏற்படுகிறது. ஆட்டோவில் செல்லலாம் என்றால், ஆம்னி பஸ்களில் மதுரை, திருச்சி செல்ல வசூலிக்கப்படும் கட்டணத்தை டிரைவர்கள் கேட்டு பயணிகளை வாயடைக்க வைக்கின்றனர். இதனால், பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் குடும்பத்துடன் படுத்திருந்து, அதிகாலை நேரத்தில் அங்கிருந்து செல்ல வேண்டியுள்ளது

source : Dinamalar