Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் வைகோ பேச்சு  Feb 7, 11
 
புதுக்கோட்டை, பிப். 6: அவமானப்பட்டுக் கிடக்கும் தமிழினம் மீண்டும் வரலாறு படைக்கும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் முத்தமிழ்ப் பாசறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:

""இளங்கோவடிகள் தனது எழுத்தாற்றலால் தமிழர்களின் வீரம், பண்பாடு காத்தல், வஞ்சகம் செய்யாமை, நீதியை நிலைநாட்டும் விதம் ஆகியவை குறித்து மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார். அத்தகைய பெருமையுள்ள உலத்தின் மூத்தத் தமிழினம் இன்று அவமானப்பட்டுக் கிடக்கிறது. விரைவில் தமிழர்கள் ஒன்று சேர்ந்து புதிய வரலாறு படைப்பார்கள். தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு உருவாகும் அதுவும் ஈழ நாடாகவே உருவாகும்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதும் தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் சுட்டுக் கொல்வதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

ஆனால், இந்த விஷயத்தில் வாய்மூடி மெüனியாக மத்திய, மாநில அரசுகள் இருப்பதை தமிழர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். கடிதம் எழுதுவதுடனும் மீனவர்களின் குடும்பத்துக்கு நிதி அளிப்பதுடனும் கடமை முடிந்துவிட்டதாக கருணாநிதி நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் எண்ணம் அவருக்கோ மத்திய, மாநில அரசுகளுக்கு இல்லை. ஆனால், வரவிருக்கும் தேர்தலில் இதற்கெல்லாம் திமுக - காங்கிரஸ் கூட்டணி பதிலளிக்க வேண்டிய நிலை வரத்தான் போகிறது'' என்றார் வைகோ.

தொடர்ந்து, விழா மலரையும் குறுந்தகடையும் வைகோ வெளியிட வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ராஜா, தொழிலதிபர் மணிகன்டன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில், பாவலேறு பெருஞ்சித்திரனார் படத்தை புரவலர் பழனியப்பனும் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் படத்தை புரவலர் பாண்டியனும் வ.சுப. மாணிக்கனார் படத்தை புரவலர் தனகோபாலும் திறந்துவைத்தனர்.

விழாவுக்கு முத்தமிழ்ப் பாசறை தலைவர் மருத்துவர் எம். சின்னப்பா தலைமை வகித்தார். அமைப்பின் செயலர் முருகேசன், பொருளர் தெட்சிணாமூர்த்தி, புரவலர்கள் புலவர் செவந்தியப்பன், ரவி, டாக்டர் சந்திரசேகரன், நிர்வாகிகள் நெ. இராமச்சந்திரன், ராமையா, காமராஜ், முருகேசன், புஷ்பராஜ், முத்து, ஆர். பாண்டிச்செல்வம், விஜய், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, முனைவர் சோ. சத்தியசீலன் தலைமையில் தமிழ் பண்பாடுகளை புறக்கணித்த தமிழ் சமுதாயம் குற்றவாளி என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் சண்முகவேல், அறிவொளி ஆகியோர் பேசினர்.

முன்னதாக, அமைப்பின் துணைத் தலைவர் கே. சந்திரன் வரவேற்றார். நிறைவில், நிர்வாகி சி. திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Source:Dinamani