Nagaratharonline.com
 
சுய தொழில் துவங்குவோரை வரவேற்கிறோம்: தொழில் மைய மேலாளர் மருதப்பன் பேட்டி  Oct 23, 09
 
""சிவகங்கை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக கடன் வழங்கப்பட்டுள்ளது'' என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மருதப்பன் கூறினார்.
அவரது சிறப்பு பேட்டி:
* தொழில் துவங்க முனைவோருக்கு தொழில் மையம் எந்த வகையில் உதவுகிறது?
முதலில் எங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்கிறோம். தேர்வு செய்யப்படுவோருக்கு கடன் தொகையில் மானியம் வழங்கப்படும். சுய தொழில் துவங்க விரும்புவோருக்கு பயிற்சியும் அளிக்கிறோம்.
* குறுந்தொழில் துவங்குவோருக்கு என்ன உதவிகள் கிடைக்கும்?
சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, கண்ணங் குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல் ஒன்றியங்களில் தொழில் துவங்குவோருக்கு இயந்திரம், மின்சாரத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. செங்கல் சூளை, ஆயத்த ஆடை, மினரல் வாட்டர் தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் மகளிர், பழங்குடியினர், ஊனமுற்றோர், அரவாணிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். இயந்திரங்களின் மதிப்பில் அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய், மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தப் படும் மின் கட்டணத்தில் 20 சதவீதம் என மானியம் வழங்கப்படுகிறது.
* அதிகபட்சமாக எவ்வளவு கடன் கிடைக்கும்?
குறு நிறுவனங்களில் இயந்திரங்களின் மதிப்பில் 25 லட்ச ரூபாய் வரையிலும், சிறு நிறுவனங்களில் 25 லட்சத்திற்கு மேல் ஐந்து கோடி ரூபாய்க்குள், நடுத்தர நிறுவனங்களில் ஐந்து முதல் பத்து கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
* தொழில் துவங்க ஒப்புதல் சான்று பெறுவது எப்படி?
புதிய நிறுவனங்களுக்கு தொழில் முனைவோர் ஒப்பதல் பகுதி- 1 என்ற சான்று பெற வேண்டும். பழைய நிறுவனங்கள் பகுதி-2 ஒப்புகை பெற வேண்டும். இதற்கு எங்களை அணுகலாம். w.w.w.msmeonline.tngov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.
* சிறு நிறுவனங்கள் விற்பனை செய்த பொருட் களுக்கு, அவற்றை வாங்கும் நிறுவனங்கள் பணம் தராமல் தாமதித்தால் மாவட்ட தொழில் மையம் மூலம் தீர்வு காண முடியுமா?
குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு சட்டம்- 2008 ன்படி இதற்கான தீர்வு சட்டமாக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் தொழில் கமிஷனர், தொழில் வணிக இயக்குனர் தலைமையில் ஒரு குழு உள்ளது. மாவட்ட தொழில் மையம் மூலம் இக்குழுவை அணுகி தீர்வு காணலாம். இம்மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் பொது மேலாளரை அணுகலாம்.
* விவசாயம், உணவு சார்ந்த தொழில்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா?
ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் துவக்கப்படும் விவசாயம், உணவு சார்ந்த தொழிலுக்கு இயந்திரங்களின் மதிப்பில் 15 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படுகிறது. மின் கட்டணத்தில் 20 சதவீத மானியம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 25 நபர்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு இயந்திரங்களின் மதிப்பில் ஐந்து லட்ச ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.
* இத்திட்டத்தில் ஜெனரேட்டர் வாங்க மானியம் உண்டா?
உற்பத்தி தொழில் துறையினர் 125 கே.வி., ஜெனரேட்டர் வாங்கினால், அதன் மதிப்பில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியம் பெறலாம்.
* தற்போது புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா?
"பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' (பி.எம். இ.ஜி.பி.,) செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உற்பத்தி பிரிவுக்கு 25 லட்சம், சேவை பிரிவுக்கு பத்து லட்ச ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. ஐந்து லட்சம் வரை கடன் பெற சொத்து ஜாமீன் தேவையில்லை. அதற்கு மேல் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும்.
* இத்திட்டத்தில் கடன்பெற என்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்?
விண்ணப்பம், திட்ட அறிக்கை, இயந்திரங்களின் விலை பட்டியல், கட்டட மதிப்பு, புளூ பிரின்ட், வாடகை ஒப்பந்த பத்திரம் கொடுக்க வேண்டும்.
* இந்த ஆண்டு எவ்வளவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
நடப்பு ஆண்டில் 48.85 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இலக்கை தாண்டி, இதுவரை 46 பேருக்கு 58.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக செங்கல் சூளை அமைக்க 20 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மகளிர் குழுவினருக்கும் கடன் வழங்க தயாராக உள்ளோம். தொழில் துவங்க விரும்புவோர் "04575-240 257' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

source ; Dinamalar 23/10/09