Nagaratharonline.com
 
பழநி பாதயாத்திரை பக்தர்கள் பரிதவிப்பு தொடர்கிறது  Jan 18, 11
 
பழநி கோயிலில் நாளை நடக்க உள்ள தைப்பூச விழாவை முன்னிட்டு, பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜன. 5ல் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு, கலெக்டர் வள்ளலார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எந்த துறை அதிகாரியும் முழுமையாக செயல்படுத்தவில்லை. இதனால் பக்தர்களின் உடல்நிலை பாதிப்பு மட்டுமின்றி சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதிலும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

பழநியில் பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் ரோடு, சன்னதி ரோடு, நான்கு கிரிவீதிகள், பாதவிநாயகர் கோயில் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தது. தற்போது கோயில் நிர்வாகம், நகராட்சி சார்பில் பெயரளவில் மட்டுமே அகற்றம் நடந்துள்ளது.கோயிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து, மிரட்டி பூஜை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்கிறது. ஓட்டல்களில் விலைப்பட்டியல், பாலித்தீன் தவிர்ப்பு போன்ற எந்த உத்தரவும் கண்டுகொள்ளப்படவில்லை.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டோர கடைகளை அகற்றி, தனியார் இடத்திற்குள் அமைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பக்தர்கள் நடுரோட்டில் நடந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. அன்னதானம் வழங்குவதை கண்காணிக்க, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கண்ட கண்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் கடைகள் மட்டுமின்றி அன்னதானம் என்ற பெயரில் தரமற்ற உணவுப் பொருட்களை உண்பதால் பக்தர்கள் பாதிப்படைவது தொடர்கிறது.

குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களுக்கான கட்டண விபரம், போர்டு அமைக்கவும், பஸ்களில் ஒட்டவும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அலட்சியத்துடன் தவிர்த்துள்ளனர்.

source : Dinamalar