Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை "செவ்வாய் பொங்கல்' : நகரத்தாரின் பாரம்பரிய அடையாளம்  Jan 18, 11
 
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், 150 ஆண்டுகளாக நகரத்தார் சமூகத்தினரால் பின்பற்றப்படும், "செவ்வாய் பொங்கல்' விழா நேற்று நடந்தது. தை பொங்கலை அடுத்து வரும் முதல் செவ்வாயில், இந்த ஊரை சேர்ந்த நகரத்தார் ஒன்று கூடி, பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன், பொங்கல் வைத்து வழிபடுவர். இதற்காக புள்ளி (குடும்பம்) வாரியாக வரி வசூல் செய்வர். இங்குள்ள 880 குடும்ப தலைவர்கள் பெயரை எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கி, முதியவரை எடுக்க செய்வர். இதில் வரும் குடும்பத்தினர் முதல் பொங்கல் வைப்பர். பாரம்பரியமிக்க இவ்விழா நேற்று நடந்தது. இதில், வெ.வீரப்ப செட்டியார் பெயர், முதல் பொங்கலுக்கு தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு கோயில் சார்பில் முதல் மரியாதை தரப்பட்டு, பொங்கல் பானையுடன் கோயிலை சுற்றி வந்தார். அதன்பின் மற்றவர்கள் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வரன் தேடுதல்: இங்கு பிறந்த நகரத்தார்கள் தொழில் நிமித்தமாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கின்றனர். இவர்கள் தவறாமல் "செவ்வாய் பொங்கல்' விழாவில் கலந்து கொள்வர். பல மாதங்கள் கழித்து உறவினர்களை பார்ப்பதால், குசலம் விசாரிப்பர். அரசல், புரசலாக பெண், மாப்பிள்ளை தேடும் சம்பிரதாயமும் இவ்விழாவில் அரங்கேறும். புறக்கணிப்பு: ஆண்டுதோறும் இவ்விழாவுக்காக வெளிநாட்டு பயணிகளை, சுற்றுலாத்துறையினர் வரவழைப்பர். பாரம்பரிய விழா, நகரத்தார்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துரைப்பர். கடந்த ஆண்டு அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 20 பேர் வந்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு சுற்றுலாத்துறையினர், இவ்விழாவை ஏனோ புறக்கணித்து விட்டனர். பாகனேரி: புல்வநாயகி அம்மன் கோயில் எதிரில் நகரத்தார் சார்பில் "செவ்வாய் பொங்கல்' விழா நடந்தது. நேற்று மாலை 4.30 மணிக்கு, 487 அடுப்புகளில் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. முத்துக்கருப்பன் செட்டியாருக்கு, முதல் மரியாதை வழங்கப்பட்டது.


Source:Dinamalar