Nagaratharonline.com
 
NEWS REPORT: அழகன் முருகனிடம்............  Jan 12, 11
 
போர்க்களம் ரணகளமாகக் காட்சியளிக்கும் பொழுது, தம் கையில் மருந்துப் பெட்டியுடன் அந்த மருத்துவர் எதையும் மிதிக்காமல் பார்த்துப் பார்த்து நடந்து வருகிறார். அவருக்குப் பின்னால் மருத்துவ தாதியாக நிணங்களை மிதிக்காமல் அந்தப் பெண்மணி மெள்ள நடந்து வருகிறாள்.

அந்த மருத்துவர் கையில் 4448 நோய்களுக்கான மூலிகைகள் அடங்கிய பெட்டி இருக்கிறது. அவரைத் தொடர்ந்து வரும் தாதியின் கையிலோ மூலிகைகளின் தைலப் பாத்திரம் இருக்கிறது.

அது சரி... இவர்களை போர்க்களத்திற்கு வரவழைத்தது யார்?

தேவாசுரப் போரில் தலைமை வகித்து நடத்தியவர் யார்? அசுரர்களின் தலைமை ஏற்று நடத்துபவன் யார்?

தேவர்கள் சார்பில் போரிடுபவர் சிவ குமாரரான முத்துக்குமார ஸ்வாமி.

அசுரர்கள் தலைவன் சூரபத் மனின் தம்பியான தாரகாசுரன்.

போரில் போரிட்ட பூதப்படை யினருக்கு முருகப்பெருமானே வைத்தியம் பார்த்துக் காப்பாற்றி இருக்க முடியும். ஏன் வைத்தி யரையும், தாதியையும் அழைக்கிறார்? அவர்கள் யார்?

அவர்கள்தான் முருகனின் தந்தையான சிவபெருமானும் - உமையம்மையும். வைத்தியம் பார்க்க வந்தவர்கள் ஆதலால் வைத்தியநாதன் என்றும் தையல்நாயகி என்றும் பெயர் பெறுகிறார்கள். போரில் வீரர்களுக்குத் தைலக் காப்பு தடவி, அனைத்து சிகிச்சையும் செய்தவள் என்பதால் தைலாம் பாள் என்றும் அழைப்பார் கள்.

இவர்கள் கோயில் கொண்டுள்ள தலம்தான் வைத்தீஸ்வரன் கோயில் எனப்படும் புள்ளிருக்கும் வேளூர்.

மக்களுக்கு இறைவனே மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராத நோய்களைத் தீர்த்தருள வல்லான்" என்று அப்பர் பெருமானின் வார்த்தையை மெய்ப்பிக்க முருகன் செய்த திருவிளையாடல் இது.

வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் திருபுள்ளிருக்கும் வேளூர் என்று பெயர்.

இதன் காரணம் என்ன?

‘புள்’ என்றால் ஜடாயு. ‘இருக்கு’ என்றால் ரிக் வேதம். ‘வேள்’ என்றால் முருகன். ‘ஊர்’ என்றால் சூரியன்.

இவர்கள் நால்வரும் பூஜித்த தலம்.

கந்தன் பூஜித்ததால் கந்தபுரி என்றும், அங்கார கன் பூஜித்ததால் அங்காரகபுரி என்றும், அம்பிகை பூஜித்ததால் அம்பிகாபுரி என்றும், ஜடாயு பூஜித்ததால் ஜடாயுபுரி என்றும், வேதங்கள் பூஜித்ததால் வேதபுரி என்றும் பெயர்.

இத்தலத்து இறைவன் மந்திரமும், மருந்துமாகி உயிர்களின் வினைகளைத் தீர்ப்பதால் ‘வினைதீர்த்தான் கோயில்’ என்ற பெயரையும் பெறுகிறது.

வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள முருகப் பெருமானின் பெயர் செல்வமுத்துக்குமார ஸ்வாமி.

இத்திருத்தலம் சிதம் பரத்திற்கும் மயிலாடு துறைக்கும் நடுவே உள் ளது. சீர்காழிப் பகுதி யிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள் ளது. வைத்தீஸ்வரன் கோயில் பெயரிலேயே ரயில் நிலையம் உள்ளது. ரயிலில் பயணப்பட்டு வருபவர்கள் மேலை கோபுரத்தின் வழியே கோயிலினுள் வரவேண்டும்.

இத்தலம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது. முடி காணிக்கை செலுத் தும் இடம் மேல கோபுரத்தின் அரு கில் உள்ளது.

பிணி தீர்க்கும் இவ்வாலயத்திற்கு வேம்பு தல மரமாக இருப்பது மிகவும் விசேஷம். இங் குள்ள அழகிய திருக்குளத்தின் பெயர், ‘சித்தா மிர்த தீர்த் தம்’. இத் தீர்த்தத்தின் ஒரு சொட்டு நீர் கூட நோய் தீர்க்கும் விசே ஷத்தை உடையது. அதனால்தான் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு வெல்லம் கரைத்து விட்டு, தலையில் தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டு போகிறார்கள்.

தீர்த்தக் கரையை விட்டு மேலே படி ஏறி வந்தால் நேர் எதிரே தைலாம்பாள் சன்னிதி இருக்கிறது. கொடி மரத் தின் அடியில் பிரார்த் தனை செய்து கொண்டு உப்பும், மிளகும் கொட்டு கிறார்கள். தீராத நோய்கள் தீர்கின்றன.

அன்னை வரப்பிரசாதி; அழகும், ஒளியும் பொருந்திய தேஜஸை உடையவள். உள்ளே கருவறையில் மந்திரமும், தந்திரமும், மருந்து மாகி தீராநோய் தீர்க்கும் வைத்தியநாதப் பெருமானைக் கண்ணார தரிசிக்கிறோம்.

உட்பிரகாரத்தில் ஸ்வாமி சன்னிதிக்கு மேற்புறம் ஸ்ரீ செல்வமுத்துக்குமார ஸ்வாமி உற்சவர் - வள்ளி - தெய்வயானையோடு எழுந்தருளி இருக்கிறார்.

ஸ்ரீசெல்வமுத்துக்குமார ஸ்வாமிக்கு நிறைய வைபவங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் இரவு ஒன்பது மணிக்கு, செல்வமுத்துக்குமாரஸ்வாமிக்கு புனுகுக்காப்பு தரிசனம் சிறப்பாக நடை பெறும். மூன்று வெள்ளிக் கிண்ணங்களில் புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனக் குழம்பு, நான்கு எலுமிச்சம் பழங்கள், பன்னீர் அரும்பு தொடுத்த மாலை, ஒரு சேர் வெற்றிலைப் பாக்கு, காளாஞ்சி இவற்றி னைச் சாற்றி, பால், பழம், பால் சாதம் வைத்து நைவேத்தியம் செய்வார்கள்.

தீபாராதனை முடிந்த பிறகு ஓதுவார் மூர்த்திகள் முத்துக்குமார ஸ்வாமி பிள்ளைத் தமிழ் பாடுவார்கள். பின்னர் விபூதி, பால், பால் சோற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

பிறகு ஓதுவார் மூர்த்திகளின் தாலாட் டைக் கேட்டபடியே பள்ளிகொள்கிறார் செல்வ முத்துக்குமரன். இந்தப் புனுகு தரிசனம் செய்வதால் செய்வினை தோஷம், நவகிரக தோஷம், நோய்-வறுமை முதலி யன நீங்கும்.

செல்வமுத்துக் குமரனுக்குப் பக்கத்தில் வெள்ளிப் பெட்டியில் முத்துலிங்கம் என்று அழைக்கப்படும் மரகத லிங்கம் உள்ளது. இதற்கு காலை, உச்சி காலம் என்ற இரு பொழுதும் முருகன் அபிஷேகம் செய்து பூஜை செய்வதாக ஐதிகம். இதற்குப் பிறகு முத்துக்குமரனுக் குத் தீபாராதனை நடைபெறும்.

ஸ்ரீ செல்வமுத்துக் குமாரஸ்வாமியை வெளியே எடுத்து வரும் பொழுது நடை பாவாடை விரித்தே எடுத்துச் செல்வர். முத்துக்குமரனை கட்டளைத் தம்பிரான் குழந்தையை அணைத்து எடுத்துச் செல்வது போல் பாதுகாப்பாக எடுத்துச் செல்வார்கள். அப்பொழுது மயில், விசிறி, முத்துப் பந்தல், தொம்பை, சாமரம், தண்டு, கொடி முதலிய சகல மரியாதைகளுடன் வைத்திய நாதர் சன்னிதி முன்பு கொண்டு வைப்பார்கள்.

விழாவில் நரியோட்டம் என்று ஒரு விளையாட்டு வைபவம் நடைபெறுகிறது. இது பங்குனித் திருவிழாவில் நடைபெறும். குழந்தை முத்தைய்யனைத் தனியே விட்டு விட்டு தாய்-தந்தை பவனி சென்று விடுவார்கள். பின்னால் வந்த குழந்தையை நரி ஒன்று விரட்டியதாம். 21 வேட்டுக்கள் முழங்க குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். அன்னைக்கும்- அப்பனுக்கும் நடுவே குழந்தை அசைந்தாடி வருவான்.

இத்தலம் அங்காரக கேஷத்திரம். அங்காரகனின் சாபம் நீங்கியதால் தனி சன்னிதி இருக்கிறது. செவ்வாய்க் கிழமையன்று அங்காரகனை ஆட்டு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பிராகாரத்தில் பவனி வரச் செய்கிறார்கள். இவரைப் பிரார்த்தனை செய்து கொண்டால் செவ்வாய்தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.

சூரியனும் வழிபட்ட தலமாதலால் பிராகாரத்தில் சூரியன், அங்காரகன் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்கள் ஒரே வரிசையில் அமர்ந்து காட்சி தருவார்கள். இது தனிச்சிறப்பு.

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை, கந்தசஷ்டி போன்ற விசேஷ நாட்களில்தான் செல்வ முத்துக்குமார ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறும். செல்வமுத்துக்குமார ஸ்வாமிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெற்ற பிறகுதான் அர்த்தஜாம பூஜை வைத்திய நாதருக்கு நடைபெறும்.

பிரம்மோற்சவத்தின் பொழுது (பங்குனி) ஐந்தாம் திருநாள் அன்று செல்வமுத்துக் குமாரஸ்வாமி, வைத்தியநாதரிடமிருந்து பூச்செண்டு வாங்கிக் கொள்ளும் காட்சி அருமையானது. தை மாதம் தெப்போற்சவம் நடைபெறுகிறது.


ஸ்ரீசெல்வ முத்துக்குமாரஸ்வாமிக்கு செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் கைகூடாத செயல்களே இல்லை.

இத்தலத்தில் மாவிளக்குப் போடுவது விசேஷமான பிரார்த்தனை. வைத்தீஸ்வரரும், செல்வ முத்துக்குமார ஸ்வாமியும் தந்தையும்-மகனுமாகக் கோயில் கொண்டு அருள்புரிவதால் இத்தலத்தில் எந்நாளும் திருநாள்தான்!

source : Mangaiyar malar