Nagaratharonline.com
 
கோயம்பேட்டில் பற்றி எரிந்த ஆம்னி பஸ் : 50 பஸ்கள் தப்பின  Jan 12, 11
 
புறப்படும் நேரத்தில் தனியார் ஆம்னி பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால், கோயம்பேட்டில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துரிதகதியில் அங்கிருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியேற்றப்பட்டதால், தீ விபத்தில் இருந்து தப்பின

பஸ் நிலையத்தில் எம்.ஜி.எம்., அஜித் டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சொகுசு பஸ், நேற்று மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் திசையன் விளைக்கு புறப்பட தயாராக இருந்தது. மாலை 4.15 மணிக்கு பஸ்சின் மேற்கூரை மற்றும் டயர்களுக்கு மத்தியில் உள்ள லக்கேஜ் பாக்சில், பார்சல்களை ஏற்றும் பணியில், ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி செல்வதற்காக இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பஸ்சிற்குள் அமர்ந்திருந்தனர்.

சரியாக 4.20 மணிக்கு பஸ்சின் மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சிற்குள் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர். தீ மளமளவென பரவியதால், லக்கேஜ் கேரியரில் பொருட்களை வைத்த பயணிகளால், அவற்றை எடுக்க முடியவில்லை.தகவல் அறிந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசாரும், சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு லாரியில் இருந்து, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, பஸ்சில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் 20 நிமிட போராட்டத்திற்கு பின் பஸ்சில் பரவிய தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.ஆனால், பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. திருச்செந்தூர் செல்வதற்காக பஸ்சில் பயணிக்க இருந்த மாணவியின் பண பை மற்றும் புத்தகங்களும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



இரவில் நடந்திருந்தால்...
ஆம்னி பஸ்கள், தற்போது பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு இணையாக பார்சல்களை ஏற்றி செல்லவும் ஆர்வம் காட்டுகின்றன. இந்த பஸ்களில் செல்லும், பொருட்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், சட்டவிரோதமான பொருட்களை எடுத்து செல்வதற்கு ஆம்னி பஸ்கள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. நேற்று பஸ்சில் ஏற்றப்பட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் காரணமாகத்தான் தீ விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது..


source : Dinamalar