Nagaratharonline.com
 
பிப்.7ல் அழகர்கோயில் கும்பாபிஷேகம்  Dec 18, 10
 
அழகர்கோயில் கும்பாபிஷேகம் பிப்., 7ம் தேதி நடைபெறும்,'' என அறநிலையத் துறை கமிஷனர் சம்பத் தெரிவித்தார். அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. கோயில் ராஜகோபுரம், ஆண்டாள், தாயார், ராமர் சன்னதி கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டுள்ளன. மகாமண்டபம், திருக்கல்யாண மண்டபம், உள், வெளி பிரகார கருங்கல் தூண்கள், மேற்கூரை போன்றவை கெமிக்கல் பிளாஸ்ட் முறையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மூலவர் சன்னதி மேல் தங்க விமானம் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில், 25 கிலோ தங்கத்தில் கோபுர தகடுகள் முலாம் பூசப்பட்டுள்ளன. இவற்றை விமானத்தில் பதிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இப்பணி நிறைவு பெற்றால் ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்தலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோயில் 18ம் படி கருப்பணசுவாமி சன்னதி அருகில் உள்ள கோட்டை சுவர், சில நாட்களுக்கு முன் 20 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. அருகில் இருந்த சுவரால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் மீதி இருந்த சுவரும் 300 அடி தூரத்திற்கு இடிக்கப்பட்டது.கும்பாபிஷேகப் பணிகள் மற்றும் இடிந்த கோட்டை சுவரை அறநிலையத்துறை கமிஷனர் சம்பத் நேற்று பார்வையிட்டார். கோயிலில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டதால் சுகாதாரப் பணிகள் சரியில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

source : dinamalar