Nagaratharonline.com
 
அழிவை நோக்கி அரிய புத்தகங்கள் மழையில் நனைந்து பாழாகும் பரிதாபம்  Oct 20, 09
 
அழிவை நோக்கி அரிய புத்தகங்கள் மழையில் நனைந்து பாழாகும் பரிதாபம்

















பாகனேரி: பாகனேரி நூலகத்தில் போதிய வசதி இல்லாததால், நூற்றாண்டு கண்ட புத்தகங்கள் அழியும் நிலையில் உள்ளன.பாகனேரி காசிவிஸ்வநாதன் செட்டியார், சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக தலைவராக இருந்தார். 13 ம் வயதில் இருந்து அரிய புத்தகங்களை வாங்கி, மற்றவர்களும் படிக்க உதவி வந்தார். 1940 ல் கருணா கடாசி வாசகசாலை, திருவள்ளுவர் நூலகம் என்ற பெயரில் கிராமத்தினர் படிக்க உதவினார்.இவரது வீட்டில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் குவிந்ததால், பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 1975 ல் 22 ஆயிரத்து 500 புத்தகங்களை அரசிடம் ஒப்படைத்தார். தற்போது அவரது பெயரில் அரசு நூலகமாக இயங்கி வருகிறது. அவர் நன்கொடை அளித்த அரிய புத்தகங்கள் அனைத் தும் அழியும் நிலையில் உள்ளன.போதிய இடம் இல்லாததால் புத்தகங்கள் சாக்கில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் தரையில் அடுக்கப்பட்டுள் ளன. கட்டட மேற்கூரை, சுவர் இடிந்து மழைநீர் கசிகிறது. இதனால் பழமையான புத்தகங்கள் அனைத் தும் நீரில் நனைந்து வீணாகின்றன.வாசகர்கள் நாளிதழ்கள் மட்டுமே படிக்கின்றனர். புத்தகங்களை படிக்க முடியவில்லை.19 ம் நூற்றாண்டில் பதிப்பான தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஆகம, உபநிடதங்கள், இலக்கணம், இலக்கியம், மருத்துவம், வரலாறு, அறிவியல் புத்தகங்கள் பயன்படாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அரிய புத்தகங்கள் இருந்தும் யாருக்கும் பயன்படாத நிலையில் உள்ளன.இதுகுறித்து சிலர் கூறியதாவது:
புரவலர் முருகப்பன் : எனது தந்தை காசி விஸ்வநாதன் மிகவும் சிரமப்பட்டு புத்தகங்களை சேர்த்து, அரசிடம் அளித்தார். சிறு கிராமத்தினருக்கும் அரிய புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்ற அவரது நோக்கம் நிறைவேறவில்லை.கனி, வாசகர் வட்ட தலைவர் : சென்னை கன்னிமரா நூலகத்திற்கு அடுத்து இங்குதான் அரிய புத்தகங்கள் உள்ளன. ஆனால் சரியான பராமரிப்பு இல்லை. புதிய கட்டடம் கட்டி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களுக்கான சிறப்பு நூலகமாக உருவாக்க அரசு முன் வர வேண்டும்.
பொக்கிஷம் தப்புமா? : பல்கலைக்கு இணையாக அரிய புத்தகங்கள் இந்நூலகத்தில் உள்ளன. இதைப்பற்றி அறிந்து பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இங்கு வருகின்றனர். எந்த நூலகத்திலும் கிடைக்காத தகவல்கள் மாணவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அவற்றை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. பல புத்தகங்கள் பக்கங்களை புரட்ட கூட முடியாத அளவில் உள்ளன. எங்கு தேடினாலும் கிடைக்காத புத்தகங்கள் இருந்தும் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் மாணவர்கள் திரும்பி செல்கின்றனர். புத்தக பொக்கிஷங்களை காக்க அரசு முயற்சிக்க வேண்டும். பொதுநல அமைப்புகளின் துணையோடு புத்தகங்களை பாதுகாக்கும் முயற்சிகள் துவக்கப்பட வேண்டும்.

source : Dinamalar 20/10/09