Nagaratharonline.com
 
மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்  Dec 10, 10
 
பொள்ளாச்சி, டிச. 9: கோவை மாவட்டத்தில் புகழ் பெற்ற அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக சாலைப் பூஜைகள் வியாழக்கிழமை துவங்கின.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 115 அடி நீளத்தில் மிகப் பிரமாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. யாக பூஜைக்காக 4 அரசிலை குண்டங்கள், 4 பத்ம குண்டங்கள், 16 இதழ் கொண்ட தாமரை குண்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு மாசாணியம்மனைக் குளிர்ச்சியூட்டும் விதத்தில் விளாமிச்சை வேரால் ஆன மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 90 ஆயிரம் வேத மந்திரங்கள் ஒலிக்க யாக சாலைப் பூஜைகள் நடக்க உள்ளன.

வியாழக்கிழமை முதல் கால யாக சாலைப் பூஜைகள் நடந்தன. 108 மூலிகைகள், 9 நவ தானியங்கள், 12 விதமான பால் வழங்கும் மரங்களின் குச்சிகளின் மூலம் 6 லட்சம் ஆகுதிகள் செய்யப்பட்ட பின் மாசாணியம்மன் கருவறைக்கு எழுந்தருள உள்ளார்.

வியாழக்கிழமை காலையில் சாந்தி வேள்வி, திசை வேள்வி வழிபாடு, புனித நதிநீர் வழிபாடு, சூரியனிடம் இருந்து நெருப்புப் பெறுதல் வழிபாடு நடந்தன.

மாசாணியம்மனுக்கு பெருந்திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலையில் திருக்குடங்களைச் சிங்காரித்து யாக சாலைப் பூஜையில் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிள்ளையார் முதலிய தெய்வங்களுக்கு கொம்பரக்கு, தேன் உள்ளிட்ட எட்டு வகை மருந்து சாத்தப்பட்டது. மாசாணியம்மனைத் திருக்குடத்திóல் எழுந்தருள்வித்து முதல் காலை யாக சாலைப் பூஜை நடந்தது.


source : Dinamani