Nagaratharonline.com
 
உயர் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்: 3 பேர் கைது  Dec 3, 10
 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து ஆஜரானது தொடர்பாக 3 பேர் சிபிசிஐடி போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.

வடபழனி குமரன் காலனியில் அமைந்துள்ள 10.5 கிரவுண்ட் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பாக சி.டி.சி. நாச்சியப்ப செட்டியார், டி.ஆர். ரத்தினேஷ்வரன் ஆகியோருக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் பி.ஆர். வீரப்பன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதே வழக்குத் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில் இந்த வழக்கு விசாரணையின் போது நாச்சியப்ப செட்டியார் என்று கூறி ஒருவர் ஆஜராகியுள்ளார். அவர் மீது சந்தேகம் எழுந்ததால் உண்மை விவரங்களைத் கண்டறியுமாறு சிபிசிஐடி போலீஸôருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நத்தம் பகுதியைச் சேர்ந்த சி. சிவராமசந்திரன் என்பவர் நாச்சியப்ப செட்டியார் பெயரில் ஆஜராகி ஆள்மாறாட்டம் செய்ததும், நாச்சியப்ப செட்டியார் 2005-ம் ஆண்டிலேயே இறந்து விட்டார் எனவும் தெரியவந்தது.

மேலும், திருப்பத்தூரைச் சேர்ந்த லியாகத் அலி, கோட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணன், டி.ஆர். ரத்தினேஷ்வரன் ஆகியோர் வேறு ஒருவரின் பெயரில் உள்ள நிலத்தை அபகரிக்க, இறந்த நாச்சியப்ப செட்டியார் அளித்தது போன்று போலியான உரிமை ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கிருஷ்ணன் இறந்துவிட்டார். மற்றவர்களில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சிவராமசந்திரன், லியாகத் அலி, டி.ஆர். ரத்தினேஷ்வரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.


source : Dinamani