Nagaratharonline.com
 
செட்டிநாடு சேலை தயாரிப்பு முடக்கம்  Nov 29, 10
 
தொடர் மழையால் காரைக்குடியில் நெசவுத்தொழில் முடங்கி, செட்டிநாடு சேலை தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிழைப்புக்காக நெசவாளர்கள் வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். காரைக்குடி, திருப்புத்தூர், கோவிலூரில் 5,000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்

தொடர் மழையால் வீடுகளுக்குள் நீர் புகுந்து, நெசவு தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குழி தறியில் தேங்கிய தண்ணீர் வடிய நீண்ட நாட்கள் ஆகும். மேலும், அவ்வப்போது தண்ணீர் ஊற்றெடுப்பதால் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிரந்தர மூடுவிழா கண்டுள்ளனர். இதனால் செட்டிநாடு சேலை தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ""மழையால் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பிழைப்பு தேடி கோவை, மதுரைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியம் கடந்த ஓராண்டாக வழங்கப்படாததால் நூல் கொள்முதல் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நலிவடைந்துள்ள இத்தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்'', என்றார்.

source : Dinamalar