Nagaratharonline.com
 
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சி  Nov 21, 10
 
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய தலையாய நோய்க்கட்டுப்பாடு என்பது உடற்பயிற்சிதான். ஆரம்பக்கட்ட நோயாளர்களுக்கு இதுவே ஒரு மாமருந்து.

உடற்பயிற்சியால் இரத்தத்திலுள்ள சர்க்கரையை இன்சுலின் எரித்துவிடுகிறது. இதனால் சர்க்கரை வெளியேறுவதும் தடுக்கப்படும். சிறு விளையாட்டுகள், பூப்பந்து ஆடுதல், ஹாக்கி, கிரிக்கெட், துரித நடை, நீச்சல் போதுமானது.

துரித நடையும், மெல்லோட்டமும் இரத்த சர்க்கரையை சீராக வைத்துக்கொள்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டிய சில அம்வங்கள்:

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஒரே நாளில் நிறைய உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. பயிற்சியின் கடுமையும், நேரத்தையும் மெதுவாக அதிகரிக்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கு முன் திரவ உணவு அருந்துவது நல்லது. வெறுங்காலுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது தவறானது. காயங்கள் ஏற்பட்டால் ஆபத்தாக முடியும்.

வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

பத்து நிமிடம் வேகமாக நடப்பதற்கும், மெதுவாக ஓடுவதற்கு பத்து நிமிடமும், ஸ்கிப்பிங் ஆட பத்து நிமிடமும், நீச்சலுக்கு பத்து நிமிடமும், உட்கார்ந்து எழுதல் மற்றும் ஏரோபிக் பயிற்சிகளுக்கு இருபது நிமிடமும் ஒதுக்கினாலே போதுமானது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு குறை இரத்த சர்க்கரை என்ற பிரச்சனை இருந்தால் உடற்பயிற்சியை கடினமாக செய்யக் கூடாது. இது உயிருக்கு ஊறு விளைவிக்கும்.

இரத்த ஓட்டம் சீராகும் வகையிலும், நரம்புத் தளர்ச்சிகள் சரியாகும் வகையிலும் மெதுவான உடற்பயிற்சிகளே போதும்.

இரத்தக் குறைவு உள்ளவர்களுக்கு செக்ஸ் பிரச்சனைகள் அதிகளவில் வந்துவிடுகின்றன. தவிர, தசை அழுகல் நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இவற்றைப் போக்க மெதுவான உடற்பயிற்சியே ஏற்றது.

சர்க்கரை நோயாளிகள் யோகாசனம் செய்வது நல்லது. பயிற்சியின் போது இதயத் துடிப்பு கூடாமலும், சுவாசத்தடை நேரிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.