Nagaratharonline.com
 
"டிவி' பார்த்தால் கண்ணில் கரு வளையம் நிச்சயம்  Nov 17, 10
 
சிவகங்கை:சிவகங்கை தினமலர் நகர் குடியிருப்போர் நலச் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். பொருளாளர் செல்வம் அறிக்கை வாசித்தார். துணை செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.



தோல் நோய் நிபுணர் டாக்டர் செண்பகாதேவி பேசியது: வெண்குஷ்ட நோய்களுக்கு சிகிச்சை இல்லை என்பது பொய். முறையாக சிகிச்சை பெற்றால் நோய் தீரும். உடலில் உள்ள நோயை பிரதிபலிப்பது தோல் மட்டுமே. தோல் நன்றாக இருக்க, தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.உடலில் புதிதாக தோன்றும் மச்சங்கள் வளர்ந்தால், தோல் புற்று நோயாக இருக்கலாம். தோல் நோயை குறைக்க தான் முடியும், தீர்க்க முடியாது. படர் தாமரை, சொறி சிரங்கு போன்றவை பருவ காலங்களுக்கு ஏற்ப வரும். இதை குணப்படுத்தலாம்.அதிக நேரம் "டிவி' பார்ப்பதால் கண்ணுக்கு கீழே கருவளையம் உருவாகும். அதிக முக அலங்காரம் செய்யும் பெண்களுக்கு, தோல் சுருங்கிவிடும். பின் வயதான தோற்றம் ஏற்படும். அந்த பருவங்களில் வளரும் பழம், காய்கறிகளை சாப்பிட்டாலே நோய்கள் அண்டாது, என்றார்.நிர்வாகி பாக்கியம் ஞானசேகரன் பரிசு வழங்கினார். செயற்குழு உறுப்பினர் தர்மர் நன்றி கூறினார். செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாடுகளை செய்தார்.


Source:Dinamalar