Nagaratharonline.com
 
தேவகோட்டையில் கழிவு நீரால் சுகாதாரக்கேடு  Nov 17, 10
 
தேவகோட்டை, நவ. 15: தேவகோட்டையில் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வசிக்கும் பகுதியான குறிஞ்சி நகரில் பெருமளவு கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோய் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

இப்பகுதியில் முருகன் கோயில் உள்ளது. இதனருகில் உள்ள ஓடை போன்று இருக்கும் இடத்தில் மழைகாலங்களில் நீர் தேங்கிவருகிறது. அப்பகுதியில் வரும் கழிவுநீர் அங்கு நிரம்பிவழிவதால் இங்கு கொசு பெருமளவில் உற்பத்தியாகிறது. இதுகுறித்து நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிகளிடம் முறையிட்டும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகளையும் அங்கு கொட்டி விடுகிறார்கள். இதனருகில் நவீன கழிப்பிடக் கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டும் செயல்படாமல் உள்ளதாகவும் கூறுகிறார்கள். கழிவுநீரை அகற்றி அப்பகுதி சுத்தமாக இருக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் சார்பாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Source:Dinamani