Nagaratharonline.com
 
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: அலை மோதிய பக்தர்கள் கூட்டம்  Nov 12, 10
 
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலிலில் நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்ககணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு யாகசாலை பூஜை, சிறப்பு ஆராதனை நடந்தன. கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்தனர்.

6-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு வி்ஸ்வருப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.

5.20 மணிக்கு கஜமுகனையும், 5.35 மணிக்கு சிங்கமுகனையும், 5.55 மணிக்கு சூரனையும் ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா என்று கோஷம் எழுப்பினர். பின்னர் பக்தர்கள் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொண்டனர். இரவு 9 மணிக்கு மேல் சுவாமி 108 மகா மண்டபம் சேர்ந்தார். பூஜையில் வைக்கப்பட்ட வெள்ளி, செம்பு யந்திர தகடுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

Source:Thatstamil