Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றம் கோயிலில் நவ. 6ல் கந்த சஷ்டி துவக்கம்  Nov 3, 10
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 6ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அன்று காலை ஆறு மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டியபின், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நடைபெறும் நாட்களில், இரவு ஏழு மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பார். தினம் காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், காலை 11, மாலை ஐந்து மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 10ல் "வேல் வாங்குதல்', நவ. 11ல் "சூரசம்ஹாரம்', நவ. 12ல் காலை சட்ட தேரோட்டம், பகல் மூன்று மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படியாகி, சுவாமிமுன் தயிர்சாத படைக்கப்பட்டு, பாவாடை தரிசனம் நடக்கும். அன்றையதினம் கார்த்திகை தீப திருவிழாவிற்கான வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கும்.




source : Dinamalar