Nagaratharonline.com
 
சிராவயல் சிவன் கோயில் குடமுழுக்கு  Oct 22, 10
 
காரைக்குடி அருகே சிராவயல் நகரச் சிவன் கோயிலின் 8-வது குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் சிவத்தொண்டர் சிராவயல் க.மு.நா. மெய்யப்பச் செட்டியாரால் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தி பின்னர் நகரத் தார்கள் அனைவரும் இணைந்து இக்கோயிலை வழிபட்டு வருவதாக கோயில் வரலாறு கூறுகிறது.

அருள்மிகு ஸ்ரீ திரிலோகநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ தியாகராஜர் சுவாமி இங்கு எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தற்போது கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டும், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், லெட்சுமி, பைரவர், நவக்கிரக மண்டபங்கள் தனி சன்னதிகள் என்று அமைக்கப்பட்டும் திருப்பணிகள் நிறைவடைந்தன.

இக்கோயில் முதல் குடமுழுக்கு 1909-ம் ஆண்டிலும் பின்னர் 1917, 1927, 1960, 1979, 1988 மற்றும் 2000-ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன.

திங்கள்கிழமை மாலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை நடைபெற்றன. 2 பஞ்சம்கினி, 10 குண்டம், 6 ஏக குண்டம் வைக்கப் பட்டு பிள்ளையார்பட்டி பிச்சைச் சிவாச்சாரியார் தலைமையில் 40 சிவாச்சாரியர்கள் பங்கேற்ற முதல்கால யாகபூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டு வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகபூஜைகளுடன் நிறைவுற்று பூர்ணாஹுதி நடைபெற்றது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த சுவாமிகள், துலாவூர், பாதரக்குடி ஆதீனங்கள் ஆகியோரது முன்னிலையில் கடம்புறப்பட்டு காலை 11.10 மணிக்கு மூலக்கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் சிராவயல் க.மு.நா.மெய்யப்பச் செட்டியார் குடும்பத்தினர், ஊராட்சித்தலைவர் கேகேஆர்எஸ். வேலுச்சாமி அம்பலம், அரளிக்கோட்டை வீரப்ப ஸ்பதியார், நகரத்தார்கள், நாட்டார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

source : Dinamani