Nagaratharonline.com
 
காரைக்குடியில் முக்கியச் சாலைகளை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி: நகர்மன்றத் தலைவர்  Sep 24, 10
 
காரைக்குடி, செப். 23: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.4 கோடி நிதி வழங்கியுள்ளது என்று நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை வியாழக்கிழமை தெரிவித்தார்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:

காரைக்குடி நகரில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.5.53 கோடி நிதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் உள்ளாட்சிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதில் காரைக்குடி நகராட்சிக்கு ரூ.4 கோடி நிதி கிடைத்துள்ளது. செக்காலை அண்ணாமலை செட்டியார் முதல் வீதி மற்றும் 2-வது வீதி, தமிழ்த்தாய் கோயில் சாலை, சுப்பிரமணியபுரம் முதல் வீதி, தாலுகாஅலுவலகச் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் முக்கிய பகுதிகளில் சிமிண்ட் சாலைகளும் அமைக்கப்படும்.

காரைக்குடியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் நிதி கோரப்பட்டது. இதில் நகராட்சியின் சார்பில் 10 சதவீத நிதியும் சேர்த்து முன்வைக்கப்பட்ட திட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் ரூ.10.5 கோடி நிதி காரைக்குடி நகராட்சிக்கு கிடைக்கும். இதில் குடிநீர் விநியோகத்துக்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

காரைக்குடியில் நகராட்சி புதிய பஸ் நிலையம் அருகில் நவீன பூங்கா ரூ.1.25 கோடி யில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவுக்கு காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றிய கொடைவள்ளல் டாக்டர் ஆர்எம். அழகப்பச் செட்டியார் நினைவாக அவரது பெயர் சூட்டும் வகையில் நகர்மன்றத்தில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்படும். இந்த பூங்கா திறப்பு விழா நவம்பரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.


Source: Dinamani
24th sept 2010