Nagaratharonline.com
 
ஏ.ஆர்.லட்சுமணன் :மாநில ஆறுகளை இணைக்க வேண்டும்  Aug 15, 10
 
கம்பர் வழிகாட்டியபடி மாநிலத்தில் ஓடும் ஆறுகளை இணைத்தால் மக்களின் தண்ணீர்ப் பிரச்சனை தீரும்'' என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தெரிவித்தார்.

கம்பன் கழகம் சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும் அதன் 36வது ஆண்டு விழா சென்னையில் நே‌ற்று தொடங்கியது. விழாவுக்குத் தலைமையேற்று ஏ.ஆர்.லட்சுமணன் பேசுக‌ை‌யி‌ல், கோசல நாட்டை அலங்கரித்துக்கொண்டு ஓடும் சரயு நதியின் அழகை வர்ணித்தவாறு கம்பனது காப்பியம் ஆற்றுப் படலத்தில்தான் தொடங்குகிறது.

ஆறுகளை தாயாகவும் நாட்டு மக்களின் தெய்வமாகவும் கருதுவது நமது பண்பாடு. அதேபோல ஆறுகளின் போக்கினை மக்களின் வாழ்க்கை நடையாகவே சித்திரிப்பதும் நமது பண்பாடுதான். பழங்காலத்தில் ஒரே ஒரு சமயமாகத் தோன்றி, ஒரே தெய்வமாகத் தோன்றிய ஒரு பொருள் காலப்போக்கில் பல சமயங்களாகவும் பல தெய்வங்களாகவும் பிரிவது போல மலையில் தோன்றிய நதி, நிலமெல்லாம் ஆறாகப் பரவி மக்களுக்கு நன்மை பயக்கிறது என்கிறார் கம்பர்.

எந்த கைமாறும் கருதாமல் நாட்டை வளப்படுத்தும் நதி நீர்ப் பங்கீட்டில் தற்போது பகை, பூசல், பிணக்கு, வழக்கு போன்றவை எழுந்துள்ளன. நம்மை இணைக்கும் ஆறுகளை நாம் இணைக்க வேண்டாமா? சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது நதிகளை இணைப்பதே நமது நாடு உய்ய வழி என 1995இல் நான் தீர்ப்பு வழங்கியிருக்கிறேன்.

முன்னாள் முதலமை‌ச்சர் எம்.ஜி.ஆரும் நதிகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்றே மத்திய அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதினார். ஆனால் அந்தத் திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. இப்போதைய முதலமை‌ச்சர் கருணாநிதி அந்தந்த மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் ஓடும் ஆறுகளை இணைக்கலாம் என்ற நல்ல யோசனையை வழங்கி அதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் ஒன்றாக இணைக்கும் கம்ப ராமாயணத்துக்கு விழா கொண்டாடும் நாம், நமது மக்களுக்குப் பயனளிக்கும் ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் ல‌‌ட்சுமண‌ன்.


source : Webdunia