Nagaratharonline.com
 
காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உத்சவம்  Jun 25, 10
 
காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் அருள்மிகு கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

இதில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மையாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக, புதன்கிழமை இரவு அருள்மிகு சித்திவிநாயகர் கோயிலில் இருந்து மின் அலங்கார ரதத்தில் பரமதத்தர் (மாப்பிள்ளை) அம்மையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டார். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு புனிதவதியார் திருக்குளக்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி தந்தார். பின்னர், திருக்கல்யாண இடத்துக்கு பரமதத்தர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

முக்கியப் பிரமுகர்கள், திரளான மக்கள் முன்னிலையில் திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மையார் கழுத்தில் சிவாச்சாரியர் தாலி கட்டினார். அப்போது, பக்தர்கள் அட்சதையை தூவி அம்மையாரை வழிபட்டனர்.



source : Dinamani