Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் அரசு மருத்துவரைஇடமாற்றம் செய்ய வலியுறுத்தல்  Jun 7, 10
 
புதுக்கோட்டை, ஜூன் 6: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள அரசு பாப்பாயி மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட அரசு மருத்துவர் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை எனக் கூறி அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் வட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசு பாப்பாயி மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர் புதுக்கோட்டையில் இருந்து மாதத்துக்கு சுமார் 5 நாள்கள் மட்டுமே பணிக்கு வருவதால், நோயாளிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அந்த மருத்துவரை உடனடியாக இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்னமராவதி, திருமயம் வட்டாட்சியர் அலுவலகங்களில் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்குத் தேவைப்படும் சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை வேண்டி வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து துரிதமாக சான்றிதழ் வழங்க வேண்டும்.

செங்கீரை ஊராட்சியில் உள்ள வனப் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் முத்தரையர் இன மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, ராயவரம் கிளைச் செயலர் ஏ. கருப்பையா தலைமை வகித்தார். வட்டச் செயலர் ஏனாதிராசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கட்சியின் மாவட்டப் பொருளர் வீ. சிங்கமுத்து பங்கேற்று, மாநிலக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கிப் பேசினார்.

இதில் வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். பெருமாள், நமனசமுத்திரம் சி. சக்தி, புலிவலம் இ. உபகாரம், கீழத்தானியம் பொன்னுச்சாமி, கிளைச் செயலர்கள் வெள்ளைக்கண்ணு, மாணிக்கம், சுப்பிரமணியன், சொ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அனைத்திந்திய பெருமன்ற வட்டச் செயலர் எம். தாஸ் வரவேற்றார். வட்டக் குழு உறுப்பினர் எம். பெருமாள் நன்றி கூறினார்.

Source:Dinamani