Nagaratharonline.com
 
NEWS REPORT: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தெப்பக்குளம் நிரம்பியது  Jan 5, 21
 
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் ஒரு குடைவரை கோவிலாகும். குன்றைக்குடைந்து அமைக்கப்பட்ட ஒரு கோவில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

குடைவரை கோவில் என்றாலே பல்லவர்களை தான் கூறுவார்கள். ஆனால் பல்லவர்களுக்கு முன்பே குடைவரை கோவில் அமைத்த பெருமை பாண்டியர்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோவில் அமைந்து உள்ளது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு 2 அல்லது 5 நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோவில் என்பதை அறியலாம். முற்கால பாண்டியர்கள் தான் இந்த குடைவரை கோவிைல அமைத்து உள்ளனர். 4-ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலின் அருகே பெரிய தெப்பக்குளம் உள்ளது. சமீபத்தில் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தெப்பக்குளம் நீர் நிரம்பி காணப்படுகிறது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதோடு நீர்நிரம்பிய தெப்பக்குளத்தின் அருகே நின்று கோவில் கோபுரத்துடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.