Nagaratharonline.com
 
சுங்கச்சாவடிகளில் முறைகேடு... அம்பலம்!; தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியானது  Mar 8, 19
 
ராஜிவ்காந்தி சாலையில், மத்திய கைலாஷில் இருந்து, கேளம்பாக்கம் வரை, தற்போது, நாள் ஒன்றுக்கு, 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கின்றன.

ராஜிவ்காந்தி சாலையில், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவது தொடர்பாக, பொதுமக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தேர்தல் நேரங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும், சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, வாக்குறுதி அளிப்பர். ஆனால், இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை.


இந்நிலையில், ராஜிவ்காந்தி சாலையில் மட்டுமே சுங்கச்சாவடிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற விபரம், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இது குறித்து, துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்கத்தின் கூட்டமைப்பைச் சேர்ந்த, பிரான்சிஸ் கூறியதாவது:சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள, சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது, வாகன ஓட்டுகளின் பல ஆண்டு கோரிக்கை.மேலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே, சுங்கச்சாவடி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், தகவல் கோரினோம். அதில், அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.அதாவது, ராஜிவ்காந்தி சாலையில் மட்டுமே, சுங்கச்சாவடிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ரேடியல் சாலை, மேடவாக்கம்- - அக்கரை சாலையில், சுங்கச்சாவடி அமைக்க, அனுமதிக்கவில்லை என, தெரியவந்தது.


ஆனால், சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர், இந்த இரண்டு சாலைகளில், 3 சுங்கச்சாவடிகள் அமைத்து, ஆண்டுக்கணக்கில், பல கோடி ரூபாய், முறைகேடாக, வாகன ஓட்டிகளிடம், கட்டணம் வசூலித்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.எனவே, ராஜிவ்காந்தி சாலையை தவிர்த்து, மற்ற இணைப்பு சாலைகளில் உள்ள மூன்று சுங்கச்சாவடிகளையும், உடனடியாக அகற்ற வேண்டும்.


அவற்றை அகற்றும் வரை, நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். சுங்கச்சாவடிகளை அகற்ற, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், சுங்கச்சாவடி கொள்ளைக்கு தீர்வு அளிக்காவிட்டால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், பொதுநலச்சங்கங்களின் கூட்டமைப்பினர், இன்று முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.