Nagaratharonline.com
 
நெற்குப்பையில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து ஓட்டல்-3 கடைகள் நாசம்  Jan 9, 19
 
நெற்குப்பையை சேர்ந்த சேகர், ராஜவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் சேகர் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் ஓட்டலில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொருட்கள் மீது தீப்பற்றியது.

ஓட்டல் சமையல் அறையில் 3 சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. எதிர் பாராதவிதமாக அதிலும் தீ பரவியது. சிறிது நேரத்தில் 3 சிலிண்டர்களும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

இதில் ஓட்டல் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த குமார் என்பவரின் சலூன் கடையும், காஜாமுகமதுவின் பெட்டிக்கடை, கதிர்வேல் என்பவரின் அடகு கடை ஆகியவையும் சேதம் அடைந்தது.

சிலிண்டர்கள் வெடித்த சத்தத்தை கேட்ட தூங்கி கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். தகவல் அறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிலிண்டர் வெடித்ததில் 4 கடைகளில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ஆகும்.

விபத்து குறித்து நெற்குப்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.