Nagaratharonline.com
 
ஆக்கிரமிப்பால் திணறும் திருப்பத்தூர் பஸ் நிலையம்  Oct 1, 09
 
திருப்பத்தூர், செப்.30: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்குள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், பஸ் நிற்பதற்கு போதிய இடம் இல்லாததால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

திருப்பத்தூரில் பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு எந்நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல போதிய இடவசதி இல்லை. ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. இதனால் பயணிகள் நிற்பதற்கே சிரமப்படுகின்றனர். விபத்து அபாயமும் நிலவுகிறது.

பஸ் நிலையத்துக்குள் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இங்கு பயன்படுத்தப்படும் இலவச கழிப்பறை சரிவர பராமரிக்கப்படாததால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நிற்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து வியாபாரி ஓருவர் கூறுகையில், ஏற்கெனவே மிகக் குறைந்த இடவசதியில் இயங்கி வரும் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. பஸ் நிலையத்தை மறித்து சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ்கள் வெளியேற முடியாமல் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

பஸ் நிலையத்துக்குள் மாடுகள் சுற்றித்திரிகின்றன. பயணிகள் நிற்பதற்கு ஏற்றவாறு நிழற்குடை அமைக்கப்படவில்லை.

பஸ் நிலையத்துக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதரவும், பஸ் வசதியாக வந்து, செல்ல போதிய வழியும், பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏற்ற வசதியும் செய்து தர வேண்டும் என்றார்.

source : dinamani 30/9/09