Nagaratharonline.com
 
NEWS REPORT: தேவகோட்டை பஸ்கள் திருப்பி விடப்படுமா  Jul 8, 18
 
மாநில நெடுஞ்சாலை துறை மூலம் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலிலிருந்து, காரைக்குடி ரயில்வே கேட் வரை 2.8 கி.மீ.,ரோடு ரூ.ஒரு கோடியே 90 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. மூன்றே முக்கால் மீட்டர் அகலமாக இருந்த ரோடு 5.5 மீட்டராக அகலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செஞ்சை அரியக்குடி ஆர்ச்சிலிருந்து - காரைக்குடி ரயில்வே கேட் வரையிலான ரோடு மாநில நெடுஞ்சாலை துறை, சாக்கோட்டை ஒன்றியம், காரைக்குடி நகராட்சி வசம் உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை ரோட்டை அகலப்படுத்திய நிலையில், கோயிலிலிருந்து குடிகாத்தான்பட்டி ரயில்வே கேட் வரையிலான ரோட்டை சாக்கோட்டை ஒன்றிய அதிகாரிகளும், குடிகாத்தான்பட்டி ரயில்வே கேட்டிலிருந்து - செஞ்சை வரையிலான ரோட்டை நகராட்சி நிர்வாகமும் அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சி.டி.பழனியப்பன், செஞ்சை, காரைக்குடி: மாலை 6:00 மணிக்கு மேல் ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டையிலிருந்து சென்னைக்கு செல்லும் ஆம்னி, அரசு பஸ்கள், செஞ்சை பெருமாள் கோயில், மகர்நோன்பு பொட்டல், வழியாக புது பஸ் ஸ்டாண்ட் செல்கிறது.

இதனால், மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நெருக்கடி ஏற்படுகிறது. ரோடு அகலப்படுத்திய நிலையில் தேவகோட்டையிலிருந்து வரும் பஸ்களை அரியக்குடி வழியாக மாற்றி விட போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதியும் கிடைக்கும், என்றார்.