Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் 3 நாள் ஆன்மிக கருத்தரங்கம்  Feb 18, 17
 
பிள்ளையார்பட்டியில் 3 நாள் ஆன்மிக கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

சிவநெறிக்கழகம் மற்றும் உலக இந்து ஆன்மிக கலாசார மையம் ஆகியவை சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கம் தொடக்க விழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜாசரவண மாணிக்க வாசக சாமிகள் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறங்காவலர்கள் நச்சாந்துபட்டி ஏ.எல்.பெரியகருப்பன் செட்டியார், காரைக்குடி என்.மாணிக்கவாசகம் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பி.எல்.சிதம்பரம் செட்டியார் தொடக்க உரையாற்றினார். பாரதி போற்றும் விநாயகர் என்ற தலைப்பில் லெ.வள்ளியப்பனும், வேதங்களும் உபநிடதங்களும் என்ற தலைப்பில் சிவஸ்ரீ கார்த்திகேயசிவம் மற்றும் வி.சோமசேகர சிவாச்சாரியார்கள் சிறப்புரையாற்றினர். திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் வாழ்த்திப்பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக உலக இந்து ஆன்மிக கலாசார மைய புதிய கட்டடம் மற்றும் ஹரிஹரன் அரங்கம் ஆகியவற்றை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் திறந்து வைத்தார். கலாசார மைய நிறுவனர் சிவஸ்ரீ கே.பிச்சைக்குருக்கள் வரவேற்றார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சுப்புராம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற உள்ளன. இவ்விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி சிவநெறிகழகத் தலைவர் வி.வயிரவக்குருக்கள், துணைத் தலைவர் எம்.சோமசுந்தர குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.