Nagaratharonline.com
 
காரைக்குடி : கழிவு தேங்கும் அரு.அ.வீதி கால்வாய்  Dec 14, 16
 
காரைக்குடி நகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட மார்க்கண்டேயர் கோயில் தெருவிலிருந்து - அத்திமரத்து காளிகோயில் தெருவரை கழிவு நீர் கால்வாய் துார்வாரப்படாததால் அரு.அ.வீதி பகுதியில் கழிவு தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.

தியாகராஜன் செட்டியார் தெருவில் உள்ள கால்வாய் பாலத்தின் சுவர் பகுதி நகராட்சியால் பாலம் பணிகள் நடக்கும்போது இடிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் கட்டப்படாததால் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.

எஸ்.செல்வம், தியாகராஜன் செட்டியார் வீதி: மற்ற பகுதியில் கால்வாய்கள் துார்வாரப்பட்ட நிலையில், 21-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் நகராட்சியால் துார் வாரப்படவில்லை.
அரு.அ.வீதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. அதே போல் கல்லுக்கட்டியிலிருந்து - கே.ஏ.எல்.ஆர்.எம்., தெரு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் பகுதியில் சுவர் இல்லாததால் கால்வாய்கள் தரை மட்டமாக உள்ளது.
கல்லுக்கட்டியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் காரைக்குடிக்குள் வருகிறது. சுற்று சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் விபத்து அபாயம் உள்ளது.
தர்மநாராயணன் செட்டியார் வீதி, அம்மன் சன்னதி, அரு.அ.வீதி பகுதிகளில் புதிய பகிர்மான குழாய்கள் பதிக்காமல், பழைய பைப் லைனிலேயே தண்ணீர் வருகிறது. இதனால், இப்பகுதிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு அதிக பட்சம் ஐந்து குடத்துக்கும் குறைவாகவே கிடைக்கிறது. எனவே, நகராட்சி இந்த பகுதி கால்வாயை துார்வாரி, குடிநீர் சப்ளையை அதிக நேரம் வழங்க வேண்டும், என்றார்.