Nagaratharonline.com
 
மாமனிதராக விளங்கிக் கொண்டிருப்பவர் வள்ளல் அழகப்பர்  Apr 7, 10
 
மனிதருக்கெல்லாம் மாமனிதராக விளங்கிக் கொண்டிருப்பவர் வள்ளல் அழகப்பர் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் சூட்டினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பரின் 101-வது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பவனநகர் ஸ்டேடியத்தில் அழகப்பர் நினைவாலயத்துக்கு அழகப்பா பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர் உமையாள் ராமநாதன், துணைவேந்தர் ப.ராமசாமி, அழகப்பரின் பேரன் வைரவன், அழகப்பரின் குடும்பத்தினர், கல்லூரிப் பேராசிரியர்கள், அழகப்பா கல்வி நிறுவனங்களின் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அழகப்பரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அழகப்பா பல்கலை. விருந்தினர் மாளிகை அருகில் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜவகர் பூங்காவை உமையாள் ராமநாதன் திறந்து வைத்தார்.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல தொடக்க உரை ஆற்றியது:

அழகப்பரின் கனவான ஜவகர் பூங்கா மூலம் கோடை காலத்தில் நம்மிடையே பசுமைப் புரட்சியை துணைவேந்தர் ஏற்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 6 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் எங்கோ குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து கொண்டிருக்கும் 92 லட்சம் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியாக இந்தச் சட்டம் வழிவகை செய்திருக்கிறது.

இந்தத் தருணத்தில்தான் அழகப்பரை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாமனிதர் இல்லையென்றால் எத்தனை பட்டதாரிகள், பொறியியல் வல்லுநர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உருவாகியிருக்க முடியாது.

எண்ணங்களைப் பொருத்துத்தான் வாழ்க்கை. உயர்வாகச் சிந்திப்பதைப் பொருத்தும் வாழ்க்கை அமையும். அதுபோன்ற வாழ்க்கையை வாழ்ந்ததால்தான் அழகப்பர் மனிதருக்கெல்லாம் மனிதராக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்றார் பொன்னம்பல அடிகளார்.

source : Dinamani