Nagaratharonline.com
 
திருப்புத்தூர் : கிடப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் திட்டம்  Mar 26, 10
 
திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை, குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இல்லை. கோடை வெயிலில் பஸ்சிற்காக காத்திருந்து தகிக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை-தஞ்சாவூர் இடையே உள்ள போக்குவரத்து மையமாக திருப்புத் தூர் உள்ளது. சுற்றுப்புறக் கிராமங்கள் அதிகமாக உள்ளதாலும், இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வருகை அதிகம். ஆனால், அதற்கேற்ப போதிய அடிப்படை வசதிகள் இங்கு கிடையாது. முக்கியமாக பயணிகள் மழை, வெயிலுக்கு ஒதுங்கவோ கூரையும், கூடமும் இல்லை. மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுக்க போதிய அறை வசதியும் கிடையாது. அதற்கு மேலாக பஸ்கள் நிற்பதற்கான டிராக் வசதியும் கிடையாது. தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களை தேடி ஓடி ஏறும் பயணிகளுக்கு பெரும்பாடாக உள்ளது.
கிடப்பில் திட்டம்: இந் நிலை மாற பேரூராட்சிகள் இயக்குநர் கோபால் பஸ் ஸ்டாண்ட் அபிவிருத்தி செய்ய உத்தரவிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திட்டம் தயாரானது. வருவாய்துறையினர் இப்பகுதியை சர்வே செய்து. அரசு நிலம் குறித்த தகவல்களின் படி 1.25 கோடி ரூபாயில் திட்டம் தயாரானது. பஸ்களுக்கு தனி டிராக் வசதி, பயணிகள் தங்க விசாலமான தங்கும் அறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இரு அடுக்காக கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கான வரைபடமும் தயாரானது. ஆனால் தற்போது இத்திட்டம் கிடப்பில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க இப்பகுதியினர் கோரியுள்ளனர்.
தற்காலிக கொட்டகை : தற்போது கோடைவெயிலில் அவதிப்படும் பயணிகளை பஸ் ஸ்டாண்டில் உள்ள இரு மரங்கள் தாம் நிழல் தரும் கூரையாக இருக்கின்றன. இருந்தாலும் பஸ் வரும் போது அவதி, அவதியாக ஓடிவர வேண்டியுள்ளது. முதியவர்கள், பெண் கள், குழந்தைகள்,நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். இதைத் தவிர்க்க தற்காலிக வேனல் கொட்டகை அவசியம். பஸ் வெளியேறும் இடத்தில் பயணிகள் நிற்க வசதியாக கூடுதல் உயரத்துடன் கொட்டகை போட்டாலும் நலம் தான்.

source : Dinamalar