Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையிலிருந்து பழனிக்கு கட்டளை முத்திரைக் காவடி பயணம்  Jan 22, 16
 
நெற்குப்பையிலிருந்து செவ்வாய்க் கிழமை இரவு கட்டளை முத்திரைக் காவடி மற்றும் 31 காவடிகள் பழனிக்குப் புறப்பட்டன.

நெற்குப்பையைச் சார்ந்த குப்பாஞ்செட்டி குமரப்பன் பரம்பரையினர் கடந்த 415 ஆண்டுகளாக நெற்குப்பையிலிருந்து காவடி எடுத்துச் செல்கின்றனர். இக்காவடி பயணத்திற்கான பூஜை நெற்குப்பை பழநிக்கோவில் வீட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்கு இரு வேல்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அவ்வேல்கள் இரண்டும் யாத்திரையில் வழிநடையாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. இந்த பாதயாத்திரையை பூசாரி ஜெயங்கொண்டான் செட்டியார், சந்தனஅய்யாசண்முகம் ஆகியோர் வழிநடத்திச் செல்கின்றனர்.

குமரப்பன் வாரிசுகளில் ஓருவர் எடுத்துச் செல்லும் காவடி கட்டளை முத்திரைக் காவடி என அழைக்கப்படும் இக்காவடி மட்டுமே பழனியில் சன்னதி முன் வைத்து வழிபடப்படுகிறது. இக்காவடியினை இந்த ஆண்டு அக்குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவன் செட்டியார் எடுத்துச் செல்கிறார். கட்டளை முத்திரைக் காவடியுடன் 31 காவடிகள் கடுக்காய்பாறை வழியாக பழனிக்குச் செல்கின்றன.

முதன்முதலில் பழனிக்கு காவடி எடுத்துச் சென்றதால் இக்குடும்பத்தைச் சார்ந்த பூசாரி செட்டியாருக்கு பழனிமலையில் அலங்கார பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படுகிறது. நெற்குப்பையில் நடைபெற்ற காவடி பூஜையில் அன்னதான மட அறங்காவலர் பட்டாபி, காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திர முன்னாள் தலைவர் பழ.அடைக்கப்ப செட்டியார் மற்றும் நகரத்தார் பலர் கலந்து கொண்டனர்.